கொரோனா தொற்றில் குணமாகி வீட்டுக்கு வந்த சகோதரிக்கு குத்து ‘டான்ஸ்’ வரவேற்பு: ஒரே நாளில் பிரபலமான இளம்பெண்

புனே: கொரோனா தொற்றில் குணமாகி வீடு திரும்பிய சகோதரியை குத்து ‘டான்ஸ்’ போட்டு வரவேற்ற இளம்பெண் ஒரே நாளில் சமூக வலைதளத்தில் பிரபலமாகி உள்ளார். நாடு முழுவதும் நாள்தோறும் கொரோனா பாதிப்பு, இறப்பு, டிஸ்சார்ஜ் எண்ணிக்கைகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கிறது. அம்மாநில மக்கள் கொரோனா தொற்றால் பீதி அடைந்து வருகின்றனர். இந்தச் சூழலில், ஒருவர் குணமடைந்து வீடு திரும்பும்போது, அவரை ஆரவாரப்படுத்தி வரவேற்பதை மக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், புனே அடுத்த தங்கவாடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் சலோனி சத்புட் (23) என்ற பெண்ணுக்கு மட்டும் ‘நெகட்டிவ்’ என வந்துள்ளது. இவரது சகோதரி தற்போது தொற்றில் இருந்து குணமாகி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த சலோனி, தனது சகோதரியை வரவேற்க குத்து பாடலை ஒலிக்கவிட்டு அதற்கு தகுந்தாற் போல் டான்ஸ் ஆடி அவரை வரவேற்றுள்ளார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது சகோதரியும், நடனமாடி கொரோனாவை வென்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 2 லட்சம் தடவைகள் மக்கள் பார்த்துள்ளனர். இதுவரை 17,000 லைக்குகள் கிடைத்துள்ளது. குத்தாட்டம் போட்டு சகோதரியை வரவேற்ற பெண்ணை நெட்டிஸன்கள் வாழ்த்தி தங்களது விருப்பத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories: