புதுவை பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் வராமல் சட்டசபை கூடியது: வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் உரை ரத்து

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரை கவர்னர் கிரண்பேடி புறக்கணித்தார். இதனால், வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் உரையை நிறுத்தி வைத்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி சட்டசபை  பட்ஜெட் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்குவது வழக்கம். அதன்படி, 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்ட வரையறைக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின் இதற்கு அனுமதி கிடைத்தது.

அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு பட்ஜெட் கூட்டம் கவர்னர் உரையுடன் துவங்குவதாக சபாநாயகர் தெரிவித்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு கவர்னர் கிரண்பேடி, முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், துறை வாரியான நிதி ஒதுக்கீடு, நிதிநிலை அறிக்கை குறித்த முழு விவரங்கள் கிடைக்கவில்லை. எனவே, பட்ஜெட் கூட்டத்தை வேறு ஒரு தேதிக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து அன்று இரவே, முதல்வர் நாராயணசாமி இதற்கு விளக்கம் அளித்து, கவர்னருக்கு கடிதம்  அனுப்பினார். அதில், புதுச்சேரி அரசின் பட்ஜெட் திட்ட வரையறை தங்களின் ஒப்புதல் பெற்ற பிறகு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார்.

எனவே, மீண்டும் தனியாக தங்களிடம் ஒப்புதல் பெற தேவையில்லை. மேலும், நீங்கள் அனுப்பிய கடிதத்தை நான் வாங்கவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய். துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு குறித்த மானிய கோரிக்கைகளை முன்கூட்டியே முடிவு செய்வது வழக்கம் இல்லை. அதற்கான அலுவல் குழு கூடி முடிவு செய்து, தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இது கடந்த 4 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. எனவே, துணை நிலை ஆளுநர் மரபுப்படி வந்து உரையாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனால் துணை  நிலை ஆளுநர் சட்டசபைக்கு வந்து உரையாற்றுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து காலை 9.30 மணிக்கு துவங்க வேண்டிய  கூட்டம் 9.50 மணிக்கு தாமதமாக கூடியது. சபாநாயகர் சிவக்கொழுந்து திருக்குறள் வாசித்து சபையை துவக்கி வைத்து, ஆளும் கட்சியை சேர்ந்த மூத்த  எம்எல்ஏ லட்சுமிநாராயணனை பேச அழைத்தார்.

தொடர்ந்து லட்சுமி நாராயணன், புதுச்சேரி சட்டமன்ற நடத்தை விதிகள் 1961ன் கீழ் 21ன் படி குறிப்பு ஒன்றை வாசித்தார். அதில், துணை நிலை ஆளுநரால் அனுப்பப்பட்ட பட்ஜெட் திட்ட வரையறைக்கு குடியரசு தலைவர் அனுமதி   வழங்கிவிட்டார். துணை நிலை ஆளுநர் வருகை தராத காரணத்தால், விதி எண் 309ன் கீழ் துணை நிலை ஆளுநர் உரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். சட்டப்பூர்வமாக பட்ஜெட் தொடர் கூடியிருக்கிறது.  துணை நிலை ஆளுநர் அவகாசம் கேட்பதால், நிதி நிலை அறிக்கை தாமதமாகி மக்களை பாதிக்கும் என்றார்.

அப்போது, குறுக்கிட்ட அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்திருக்கிறேன். அதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். துணை நிலை ஆளுநர் உரை இடம்பெறுமா, இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடன் அதிமுக எம்எல்ஏக்கள் பாஸ்கர், வையாபுரிமணிகண்டன், அசானா ஆகியோரும் குரல் எழுப்பினர். இவர்களுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதியும் துணை நிலை ஆளுநர் உரை இடம்பெறாதது சட்டவிரோதம், இதற்கு அதிகாரம் கிடையாது என கூறி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம்   ஏற்பட்டது.

இதனை சபாநாயகர் சிவக்கொழுந்து குரல் வாக்கெடுப்புக்கு விட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். அதன்படி, துணை நிலை ஆளுநர் உரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும். மதியம் 12.05 மணிக்கு நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் கூறி சட்டசபையை ஒத்திவைத்தார். இதன்மூலம் வரலாற்றில் முதன் முறையாக கவர்னர் உரை சட்டசபையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் யூனியன் பிரதேச நிர்வாகியான துணை நிலைஆளுநர் உரையை நிறுத்தி வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் யூனியன் பிரதேச நிர்வாகியான துணை நிலைஆளுநர் உரையை நிறுத்தி வைத்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: