2 ஜீயர்களுக்கு தொற்று உறுதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் நிறுத்தப்படுமா? அதிகாரிகள் அவசர ஆலோசனை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த மாதம் 8ம் தேதி முதல் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. தினமும் 12,500 பக்தர்கள், விஐபி தரிசனத்தில் முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன் தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்கள் என 140 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில், அர்ச்சகர்கள் 40 பேரில் 18 பேருக்கு கொரோனா உறுதியானது. இருப்பினும், பக்தர்கள் தரிசனத்தை நிறுத்த தேவஸ்தான போர்டு மறுத்து விட்டது.

இந்நிலையில், கோயிலில் பூஜைகளை கண்காணிக்கும் சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ சிறிய ஜீயர் ஆகியோருக்கு தற்போது கொரோனா தாக்கியது உறுதியாகி இருக்கிறது. இதனால், அவரது ஏகாங்கிகள் எனப்படும் சிஷ்யர்கள் 20க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை நேற்று செய்யப்பட்டது. இதன் முடிவு இன்று வெளிவரும் என தெரிகிறது.  ஆனி வார ஆஸ்தானம் எனப்படும் கோயிலில் கணக்கு சமர்ப்பித்தல் நிகழ்வு கடந்த 15ம் தேதி நடந்தது. அப்போது, ரங்கத்தில் இருந்து பட்டுவஸ்திரம் ெகாண்டு வரப்பட்டு ஜீயர்கள் மடத்தில் வைத்து சுவாமிக்கு சமர்ப்பித்தனர்.

இதில், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், இந்த 2 ஜீயர்களும் கலந்து கொண்டதால் ரங்கம் கோயில் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே கொரோனா பாதித்துள்ள மூத்த அர்ச்சகர் நரசிம்மாச்சாரி, நேற்று முன்தினம் சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  தேவஸ்தான பணியாளர்கள், அர்ச்சகர்கள், ஜீயர்கள் என தொடர்ந்து பலருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யார் முன்னிலையில் பூஜை?

ஏழுமலையான் கோயில் 2 ஜீயர்களுக்கும் ெகாரோனா உறுதியான நிலையில் வைஷ்ணவ சம்பிரதாய அடிப்படையில் செயல்படும் ஏழுமலையான் கோயிலில் ஜீயர்களின் செயல்பாடுகள் மிக முக்கியம். காலை முதல் இரவு வரை அனைத்து கைங்கரியங்களும் ஜீயர்கள் முன்னிலையில் செய்யப்படும். ராமானுஜர் வகுத்து கொடுத்த நெறிமுறைப்படி இந்த நடைமுறை இன்றும் பின்பற்றப்படுகிறது. எனவே, ஜீயர்கள் சிகிச்சை முடிந்து மடத்திற்கு திரும்பும் வரை கோயிலில் நடக்கும் கைங்கரியங்களை கண்காணிப்பது இனிமேல் யார் என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.

Related Stories: