இருப்பு வைக்க வியாபாரிகள் தயக்கம்: சீன மொபைல் போன்களின் உதிரி பாகங்கள் விலை கிடுகிடு: வாடிக்கையாளர்கள் ‘ஷாக்’

ஐதராபாத்: சீனப் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து, வியாபாரிகள் சீன மொபைல் போன்களின் உதிரி பாகங்களை இருப்பு வைக்க தயங்குகின்றனர். இதனால், அவைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.  தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அபிட்ஸ் பகுதியில் உள்ள ஜகதீஷ் மார்க்கெட், நகரின் மிகப்பெரிய மொபைல் போன் மார்க்கெட் ஆகும். இங்கு 800 கடைகள் வரை உள்ளன. தினசரி 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் அவைகளுக்கு தேவையான இயர்போன், யூஎஸ்பி கேபிள், பவுச்சஸ், சார்ஜர்கள் என அனைத்து மொபைல் போன்களின் உதிரிபாகங்களும், லோக்கல் மொபைல் கம்பெனிகளின் தயாரிப்புகளும் கிடைக்கின்றன.

இந்நிலையில், லடாக்கில் ஏற்பட்ட எல்லைப்பிரச்னையால் இந்தியாவில், சீன பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்து வருகிறது. இதனால் ஜகதீஷ்  மார்க்கெட் கடைக்காரர்கள், சீன மொபைல் போன்கள் மற்றும் உதிரிபாகங்களை குறைந்த அளவே இருப்பு வைத்துள்ளனர். இதனால் உதிரி பாகங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு, 80 முதல் 250 வரை விற்கப்படும் ஒரு பவுச் தற்போது 350க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல மற்ற உதிரிப்பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளது.  சென்னை, மற்றும் மும்பையைப் போல ஐதராபாத் நகரிலும் சீன இறக்குமதி மொபைல் போன் உதிரிபாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த விலையேற்றத்துக்கு சீனாவில் ஏற்பட்ட கொரோனா பரவல் ஒரு காரணமாக இருந்தாலும், நாட்டில் சீனப் பொருட்களை தடை செய்ய வேண்டும் என எழுந்த கோரிக்கையே முக்கிய காரணம் என மொபைல் போன் உதிரிபாகங்கள் விற்பனை கடைக்காரர் அபிஷேக் தெரிவிக்கிறார். மற்றொரு வியாபாரியான துர்கேஸ் என்பவர் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் மொபைல் போன் மற்றும் லேப்டாப் உதிரிபாகங்களை விற்று தினமும் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பாதிப்பேன். தற்போது ₹10 ஆயிரமாக குறைந்துவிட்டது. இவ்வாறு இருந்தால் கடை வாடகை கூட கொடுக்க முடியாது’’ என்றார்.  மார்க்கெட்டில் உதிரிபாகங்களின் விலை, ஆன்லைன் விலைக்கு இணையாக உள்ளதாக வாடிக்கையாளர்களும் தெரிவிக்கின்றனர்.

Related Stories: