சாத்தான்குளம் அருகே உயிரிழந்த 8 வயது சிறுமியின் குடும்பத்திற்கு 3 சென்ட் வீட்டு மனைக்கான பட்டாவுடன் ரூ.4.12 லட்சம் நிதியை வழங்கினார் ஆட்சியர் சந்தீப் கந்தூரி!!

தூத்துக்குடி : சாத்தான்குளம் அருகே உயிரிழந்த 8 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 4,12,500 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கல்விளை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி கடந்த புதன்கிழமை காலை கடைக்குச் சென்றுள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் திரும்பி வராததால் குடும்பத்தினர் தேடியுள்ளனர். இந்நிலையில் கல்விளையில் இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் இசக்கியம்மன் கோயில் அருகே உள்ள கால்வாய் பாலத்துக்கு அடியில் தண்ணீர் தொட்டி ஒன்றில் சிறுமியின் உடல் கிடந்துள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில் சாத்தான்குளம் போலீஸார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இங்கு உடற்கூறு பரிசோதனை முடிவடைந்த நிலையில்,அவரது உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு நேரில் விசாரணை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு 3 செண்ட் நிலம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து திருச்செந்தூர் வட்டாட்சியர் ஞானராஜ் மற்றும் கோட்டாட்சியர் தனப்பிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பரிமளம் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது. வன்கொடுமையால் பாதிகப்பட்டவருக்கான நல நிதி முதற்கட்டமாக ரூபாய் 4.28 லட்சம், சிறுமி தாயார் உச்சிமாகாளிக்கு வீட்டுமனை பட்டா, சிறுமியின் 10 வயது சகோதரனுக்கு தேவையான படிப்பு செலவு ஆகியவை அரசு சார்பில் வழங்க பரிந்துரைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சாத்தான்குளம் அருகே உயிரிழந்த 8 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 4,12,500 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மொத்த நிவாரணத் தொகையான ரூ. 8,25,000ல் பாதித் தொகை தற்போதும், மீதித் தொகை பின்னரும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 சென்ட் வீட்டு மனைக்கான பட்டாவும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. உயிரிழந்த சிறுமியின் தாய்க்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாதம் ரூ.5,000 முதியோர் உதவித் தொகையும் வழங்கப்பட உள்ளது.சிறுமியின் குடும்பத்தினரிடம் பேசிய பின், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நிவாரணத்தை வழங்கினார்.

Related Stories: