திருக்குறளை இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருப்பது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும் : முதல்வர் பழனிசாமி!!

சென்னை : திருக்குறளை இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என பிரதமர் மோடி கூறியதற்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததை அடுத்து, லடாக் சென்று வீரர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, திருக்குறளை குறிப்பிட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார்.இதுதொடர்பான பத்திரிகை செய்திகளை வெளியிட்டு, டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர், திருக்குறள் ஒரு அற்புதமான ஊக்குவிப்பு நூல் என்று குறிப்பிட்டுள்ளார். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துகள் அனைத்தும், நம்பிக்கையும், ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை என்றும் கூறியுள்ளார்.இந்தியா முழுவதிலுமுள்ள இளைஞர்கள் பலரும், திருக்குறளைப் படித்துப் பயன்பெறுவார்கள் என்று தாம் நம்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உலகப் பொதுமறையாம் திருக்குறள் ஒரு நீதி நூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றது.‌ இனம், மொழி, நாடு போன்ற எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வினை நெறிப்படுத்தும் உயரிய நூலாகும். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில், தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க திருக்குறளை இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கூறியிருப்பது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும், என்றார்.

Related Stories: