தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது தவறு; அமைச்சர் பாண்டியராஜன் குற்றச்சாட்டு

பெரம்பூர்: தமிழக அரசு கோரியுள்ள கொரோனா பேரிடர் நிதியை, மத்திய அரசு இதுவரை முழுமையாக வழங்கவில்லை, என அமைச்சர் பாண்டியராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 24 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். அவர்களுக்கு அமைச்சர் பாண்டியராஜன் வாழ்த்து தெரிவித்து, பழங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சிறப்பு தொகுப்பு கொடுத்து வழியனுப்பினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பலர் தானாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்கின்றனர். இவர்களுக்கு சன்மானமோ, ஊக்க தொகையோ கொடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கும். கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பது போல், மற்ற நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எந்த தொழிற்சாலையும் கொரோனா காரணமாக மூடப்படாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. அடுத்த தளர்வு அறிவிக்கப்படும் போது இன்னும் பல தொழில்கள் உயிர்பெறும். அம்பத்தூர் உள்ளிட்ட சிப்காட் பகுதிகளில் ஊழியர்கள் தினசரி வேலைக்கு சென்று விடுவதால் அங்கு பரிசோதனை செய்வதில் சிரமம் உள்ளது. எனவே, காய்ச்சல் முகாம் நேரத்தை 2 ஷிப்ட்டாக மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அதுகுறித்து கண்காணிக்கப்படும். அப்படி இருந்தால் அதுபற்றி மத்திய அரசுக்கு எடுத்துரைக்கப்படும். கொரோனா பேரிடர் சூழலில், தமிழக அரசு கோரியுள்ள ரூ.9 ஆயிரம் கோடி நிதியில் மத்திய அரசு இதுவரை ரூ.621 கோடியை மட்டுமே விடுவித்துள்ளது. மேலும், ரூ.4,500 கோடிக்கு மத்திய அரசு நேரடியாக உதவிகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகம் கேட்ட நிதியை முழுமையாக ஒதுக்கிவிட்டதாக நிர்மலா சீதாராமன் கூறியிருந்தால் அது தவறு. தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய மீதமுள்ள நிதியை விரைந்து வழங்கினால், நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: