கோவிட் வரி விதிப்பு எதிரொலி: புதுச்சேரியில் காற்று வாங்கும் மதுக்கடைகள்...அரசுக்கு வருவாய் கிடைப்பதில் சிக்கல்!

புதுச்சேரி: கோவிட் வரி விதிப்பு எதிரொலியாக புதுச்சேரியில் மதுபானங்கள் விற்பனை முற்றிலும் சரிந்துள்ளதால் அரசுக்கு வருவாய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உயிர்கொல்லி கொரோனா பரவல் எதிரொலியாக புதுச்சேரியில் மூடப்பட்ட மதுக்கடைகள் மே 24ம் தேதி முதல் திறக்கப்பட்டன. ஆனால் மது வகைகளுக்கு பெயர் பெற்ற புதுச்சேரியில் தற்போது விற்பனை பெருமளவு சரிந்திருக்கிறது.

கோவிட் வரி மற்றும் தமிழ்நாட்டிற்கு இணையாக மதுபானங்களின் விலை உயர்வு ஆகியவற்றால் புதுச்சேரியில் மதுபானத்தின் விலை 200 சதவீதம் உயர்ந்துவிட்டதே இதற்கு காரணம். இதுகுறித்து அங்குள்ள மதுபிரியர்கள் தெரிவித்ததாவது, முன்னதாக 50 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள் தற்போது 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 90 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட ஒரு பீர் தற்போது 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெரியளவில் உள்ள மதுபானங்களின் விலையை போல அனைத்து மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய மக்களே. எனவே உடனடியாக விலை உயர்வை குறைக்க வேண்டும் என தெரிவித்தார். கோவிட் வரி உயர்வு எதிரொலியாக 920 மதுபானங்களின் விலை அதிகரித்துவிட்டதால் புதுச்சேரியில் பலரும் சாராயத்தின் பக்கம் சாய்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு கலால் வரி மூலம் புதுச்சேரி அரசுக்கு 1200 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு வருவாய் விகிதம் பெருமளவு குறையும் என்று தெரிகிறது. எனவே கோவிட் வரியை குறைக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுபிரியர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories: