சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு 8 ஆண்டுக்கு பின்பு வத்தல்மலையில் தாவரவியல் பூங்கா : முதற்கட்ட பணிகள் துவங்கியது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் வத்தல்மலையில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இங்கு காபி மற்றும் செவ்வந்தி, காக்கட்டான் உள்ளிட்ட பூ வகைகள், சில்வர் ஓக் மரங்கள், குச்சிக்கிழங்கு, சாமை, தினை, கேழ்வரகு போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகின்றது. கடந்த 2012ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கலெக்டர்கள் மாநாட்டின் போது, வத்தல்மலை சுற்றுலா தலமாக்கப்படும் என அறிவித்தார்.

இதைதொடர்ந்து வத்தல்மலை சுற்றுலா மேம்பாட்டிற்காக ₹24 கோடி ஒதுக்கப்பட்டது. தார் சாலை, ஏரி, சுற்றுலா மையம், படகு இல்லம், வாட்ச் டவர், பொட்டானிக்கல் கார்டன் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி முகமை சார்பில், வத்தல்மலைக்கு செல்லும் மலைப்பாதையில் தின்னஅள்ளி ஊராட்சிகுட்பட்ட கொமத்தம்பட்டியில் இருந்து அடிவாரம் வரையிலும், மலைப்பாதை துவக்கத்தில் இருந்து பெரியூர், சின்னாங்காடு, ஒன்றியங்காடு, மன்னாங்குழி, நாய்க்கனூர், பால்சிலம்பு, கொட்டலாங்காடு உள்ளிட்ட 7 கிராமங்கள் வழியாக 16.9 கி.மீ தூரத்திற்கு 13.14 கோடியில் தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மலைப்பாதையில் 10.5 கி.மீ வரை வனத்துறையாலும், 10.5 கி.மீ முதல் 14.9 கி.மீ வரை ஊரக வளர்ச்சி முகமையாலும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தோட்டக்கலைத்துறை சார்பில், 55 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதன்மூலம் வத்தல்மலை தமிழக சுற்றுலா தலங்களின் பட்டியலில் இடம் பெற தயாராகி வருவதாக தெரிவித்தனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், வத்தல்மலை பெரியூர் பகுதியில் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக வத்தல்மலை கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்காக தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற செடிகளின் நாற்றுகள் உற்பத்திக்காக நாற்றங்கால் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் மலைப்பகுதியில் தோட்டக்கலை பயிர்கள் வளர்க்க ஊக்குவிக்கப்படும். இதை தொடர்ந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெறும் என்றனர்.

Related Stories: