பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புதிய உணவகத்தை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவதை, 14ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார். தொடங்கி வைத்த உடன் அதை எந்த வகையில் மாணவர்களுக்குப் புத்தகப்பையோடு வழங்கலாம் என்று ஆய்வு நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வு நடத்தி எங்களுக்கு தெரிவித்தவுடன், எப்படி வழங்குவது என்பது முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவரிடம், ஆன்லைன் வகுப்புகளுக்காக மடிக்கணினி கொண்டு வரவேண்டும் என அறிவித்துள்ளார்களே? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இதுவரையிலும் இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு இ-பாக்ஸ் எனும் நிறுவனத்தின் மூலமாக முதல்வர் அதை 14ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். அவர் தொடங்கி வைத்தவுடன் புதிய வரலாற்றைப் படைக்கும் விதமாக அமையும். மேலும், பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து, 18 பேர் கொண்ட குழு வரும், 13ல் அறிக்கை தாக்கல் செய்கிறது. இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 30 சதவீத பாடம் குறைக்கப்பட்ட பின், பல்வேறு விமர்சனம் எழுந்துள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை. சென்னையை பொறுத்தவரை அனைவரும் ஆன்லைன் கல்வி கற்க வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.

Related Stories: