சென்னை துறைமுக சிறப்பு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு மறுப்பு!: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நிர்பந்தம்?..பணியாளர்கள் புகார்

சென்னை: கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் சென்னை துறைமுக பணியாளர்களை அங்குள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நிர்வாகம் அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி, ஊழியர் சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நிர்வாகம் நிர்பந்திப்பதாகவும் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை துறைமுகத்தில் 100 ஆண்டுகள் பழமையான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் பல லட்சம் ரூபாய் செலவில் கொரோனா சிறப்பு மையம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்நிலையில் துறைமுக பணியாளர்கள் கொரோனாவால் உயிரிழந்தும், நூற்றுக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டும் உள்ளனர். ஆனால் 6 வெண்டிலேட்டர்கள் இருந்தும், அவற்றிற்கு தினந்தோறும் வாடகை செலுத்தியும் கூட மருத்துவமனையில் ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்க துறைமுக நிர்வாகம் மறுப்பது ஏன்? என சென்னை துறைமுக கப்பல் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சந்தானம் கேள்வி எழுப்பியுள்ளார்.

துறைமுக பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நிர்வாகம் நிர்பந்திப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் ஏற்படும் செலவுகளை தொழிலாளர் குடும்பத்தினர் வசமே விட்டுவிடுவதாகவும் சந்தானம் புகார் கூறியுள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் ஊழியர்களுக்கு துறைமுக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதில் பல்வேறு மோசடி நிகழ்வதாகவும், அவற்றை சுட்டிக்காட்டி மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: