இன்ஸ்டாகிராமில் போட்டோவை ஆபாசமான மார்பிங் செய்து இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்களிடம் பல கோடி மோசடி: கீழக்கரை, நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது

கீழக்கரை: மார்பிங் செய்த பெண்களின் ஆபாச படத்தை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பல கோடி ரூபாய் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெர்மனியில் படித்து வரும் மாணவர் தலைமையில் கும்பல் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், எஸ்.பி. வருண்குமாரிடம் தொலைபேசியில் ஒரு புகார் அளித்தார். அதில், எனது தொலைபேசி எண்ணிற்கு இன்டர்நெட் தொலைபேசி மூலம் சில நபர்கள் தொடர்பு கொண்டு, இன்ஸ்டாகிராமில் உள்ள எனது படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டினர். மேலும் என்னிடம் ரூ.7.50 லட்சம் வரை வாங்கிக்கொண்டு, இதனை வெளியில் கூறினால் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் கூறி மிரட்டினர் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து எஸ்பி வருண்குமார், மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர் இன்ஸ்டாகிராம் மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த முகமது முகைதீன், ஜெர்மனியில்  பட்டப்படிப்பு படித்துக் கொண்டு, இதுபோன்ற தகாத வேலைகளில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்டு வருவது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில், இவரது நண்பர்களான நெல்லை ஜாசம் கனி, சென்னை பாசித் அலி, புதுச்சேரி முகமது இபுராகிம், கீழக்கரை பகதூ பைசல், நாகப்பட்டினம் முகமது ஜாசிம் ஆகியோர், முகமது முகைதீன் தலைமையில் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்குகளை தொடங்கி, ராமநாதபுரத்தில் அனைவரும் இருப்பதுபோல சித்தரித்து, பல பெண்களிடம் பல கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் கொடுத்த புகாரின்பேரில், ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 6 பேர் மீதும் வழக்குப்பதிந்து, நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பகதூ பைசல் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான 4 பேரை  தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த ஆண்டு  கீழக்கரையை  சேர்ந்த சில பெண்களிடம் சிலர், ஆபாச படங்களை வைத்து மிரட்டி பணம் பறித்தனர். அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார்  அளிக்காததால் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இச்சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: