உ.பி.யில் நள்ளிரவில் கைது செய்ய சென்றபோது பயங்கரம் ரவுடி கும்பலின் துப்பாக்கிச்சூட்டில் டிஎஸ்பி உட்பட 8 போலீசார் பலி: பிரபல ரவுடி தப்பி ஓட்டம்

கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் பயங்கர ரவுடியை நள்ளிரவில் கைது செய்யச் சென்ற போலீஸ் படை மீது ரவுடிகள் சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டதில், டிஎஸ்பி உட்பட 8 போலீசார் கொல்லப்பட்டனர். 7 போலீசார் படுகாயமடைந்தனர். இது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குளில் சம்பந்தப்பட்டவன் விகாஸ் துபே என்கிற ரவு. பயங்கர ரவுடியான இவன் மீது கொலை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், வன்முறை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் நடந்த கொலை முயற்சி வழக்கில் விகாசை போலீசார் தேடி வந்தனர்.  இந்நிலையில், திப்ரு கிராமத்தில் அவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விகாசை கைது செய்வதற்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். டிஎஸ்பி திவேந்திர குமார் மிஸ்ரா, தலைமையில் 3 காவல் நிலையங்களை சேர்ந்த 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் நேற்று முன்தினம் இரவு சென்றனர்.

அப்போது கிராமத்திற்கு செல்லும் சாலை மறிக்கப்பட்டு இருந்தது. குறுக்கே புல்டோசர் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக காவலர்கள் கீழே இறங்கி வாகனத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார். போலீசாரின் வாகனம் கிராமத்தை நோக்கி சென்றது. அப்போது, வீடுகளின் கூரைகளின் மேல் பதுங்கி இருந்த ரவுடி விகாஸ் கும்பலை சேர்ந்த ரவுடிகள், போலீசாரின் வாகனத்தின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். மூன்று பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டதால் போலீசார் நிலைகுலைந்தனர். ரவுடிகள் நடத்திய இந்த திட்டமிட்ட தாக்குதலில் டிஎஸ்பி மிஸ்ரா உட்பட 8 போலீசார் உயிரிழந்தனர். 7 போலீசார் காயமடைந்தனர். எனினும், போலீசார் நடத்திய தாக்குதலில் இரண்டு ரவுடிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் பெயர் விவரங்கள் தெரியவில்லை. விகாஸ் உள்ளிட்ட மற்ற ரவுடிகள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

ஒரே நேரத்தில் 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவ இடத்துக்கு காவல்துறை உயரதிகாரிகள் விரைந்துள்ளனர். போலீசாரின் சடலங்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து உத்தரப் பிரதேச காவல்துறை இயக்குனர் ஜெனரல் அவாஸ்தி கூறுகையில், “வீடுகளின் மேற்கூரையில் பதுங்கி இருந்து ரவுடிகள் கும்பல் திட்டமிட்டு போலீசார் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் சம்பவம் நடந்த கிராமத்தில் குவிக்கப்பட்டு ரவுடிகளை பிடிக்கும் பணியில் தீவிரவமாக ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 போலீசாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்றார். இந்நிலையில், ரவுடிகளின் தாக்குதலில் உயிரிழந்த போலீசாருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

* ராகுல், பிரியங்கா கண்டனம்

உத்தரப் பிரதேசத்தில் டிஎஸ்பி உட்பட 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், காங்்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘கான்பூரில் 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது மாநிலத்தில் குண்டராட்சி நடப்பதற்கான மற்றொரு ஆதாரமாகும். போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்? உயிர் தியாகம் செய்த போலீசாரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்த போலீசார் குணமடைய பிரார்த்திக்கிறேன்,’ என குறிப்பிட்டுள்ளார். இதேபோல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. குற்றவாளிகளுக்கு பயமில்லை. பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்குக்கு முதல்வர் தான் பொறுப்பு. இதுபோன்ற பயங்கரமான சம்பவத்துக்கு பின்னராவது முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

* கொல்லப்பட்ட போலீசார்

டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ் சந்திரா யாதவ், அனூப் குமார் சிங், நேபு லால், காவலர்கள் ஜிதேந்திர பால், சுல்தான் சிங், பப்லு குமார் மற்றும் ராகுல் குமார்.

* 7 போலீசார் கவலைக்கிடம்

ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 போலீசார் குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

Related Stories: