தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் மது விற்பனை செய்யப்படுகிறது. : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

டெல்லி:  தமிழகத்தில் மது விற்பனையின் போது நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதால் மாநிலம் முழுவதும் உள்ள கடைகள் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல்  மூடப்பட்டது. ஏறக்குறைய 40 நாட்கள், தமிழகத்தில் மதுவின் வாடை இல்லாமல் இருந்தது. இது ஒரு அரிய வாய்ப்பு. அதை அப்படியே பின்பற்றி, மதுவின் பிடியில் இருந்து மக்கள் மீண்டு வருவார்கள் என்று சமூக மேம்பாட்டு அமைப்புகள் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தது.  

ஆனால் ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இங்குள்ள மக்கள், அம்மாநில எல்லைப்பகுதிக்கு மது அருந்த செல்வதால் குழப்பங்கள் ஏற்படும் என்று கூறியதோடு, மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. 41 நாட்களுக்கு பிறகு, மே 7ம் தேதி மீண்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. குடிமகன்கள் ஆனந்தக்கூத்தாடி மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக வாங்கிக்குடித்தனர். இதில் மே 7 மற்றும் 8-ம் தேதிகளில் ரூ.290 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை விதித்தனர். ஆனால் தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி பெற்றது. அதனை தொடர்ந்து தமிழக முழுவதும் டாஸ்மாக் கடைகளை அரசு திறந்தது. ஆனால் கொரோனா தாக்கல் அதிகம் உள்ள சென்னையில் மட்டும் இதுநாள் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் அதிகரித்து வருவதால் ஒரு சில மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகிறது.

மக்கள் சமூகஇடைவெளி இல்லாமல், முகக்கவசம் இல்லாமல் மது வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக செல்வதாக தமிழகம் முழுவதும் புகார்கள் எழுந்தது. இதனால் கொரோனா பரவலும் அதிகரித்தது. டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது  டாஸ்மாக் தொடர்பான வழக்கு  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் போது தமிழக அரசு சார்பில், மது விற்பனையின் போது நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும்,  தடுப்புகள் அமைத்தும் மது விற்பனை செய்யப்படுகிறது  என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: