பொதுமக்கள் யாராவது காவலர்களால் துன்புறுத்தப்பட்டால் 100, 112க்கு தகவல் தெரிவிக்கலாம்: கூடுதல் டிஜிபி ரவி தகவல்

சென்னை: பொதுமக்கள் யாராவது காவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டால் உடனே 100, 112க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், அதன்படி உடனே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி கூறியதாவது: ‘காவல் துறையினர் அடிப்பது போன்ற வீடியோக்கள் அதிகமாக எனக்கு வந்துள்ளது. காவல் துறையினர் பொதுமக்களை அடிக்கக் கூடாது. அடிப்பதால் எந்தவித பயனும் வரப்போவதில்லை.

இந்த ஊரடங்கு சமயத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மீறினால், அவர்களிடம் அன்பாக பேசி திருந்தும் வகையில் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு ஆக்ரோஷமாக அவர்களிடம் பேசுவது, அவர்களை அடிப்பது இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தக் கூடாது. தற்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் சரியாக இருக்காது. காவல் துறையினர் ஒரு சிலர் இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபடுவதால் ஒட்டு மொத்த காவல் துறைக்கும் ஒரு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

காவல் துறையினர் பொதுமக்களின் நண்பன் என்று முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய டிஜிபி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி புகைப்படத்தின் கீழ் ஒரு வாசகம் எழுதி இருக்கு. அதில், பொதுமக்கள் நம்முடைய எஜமானர்கள். நாம் அவர்களுடையே சேவகர்கள் என்று எழுதி இருக்கு. இந்த சீருடை போடுவது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு தான். நான் ஒரு ஐபிஎஸ், நான் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், நான் ஒரு காவலன் என்று சொல்லி ஒரு இருமாப்போடு ஒரு கர்வம் ஒரு பவர் என்று சொல்வதற்காக இந்த சீருடை அல்ல. இந்த சீருடை என்பது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான். பொதுமக்கள் நம்மை திட்டினால் கூட நாம் அமைதியாக இருக்க வேண்டும். எனவே காவல் துறையினர் பொதுமக்களிடம் அன்பாகவும், மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஒருசில காவல்துறையினர் பொதுமக்கள் மீது அத்துமீறி நடந்தால் அடுத்த நிமிடமே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் உடனே அடிங்க அவசர எண்களான 100, 112க்கு. அப்படியும் இல்ல என்றால் காவலன் ஆப்பில் தெரிவிக்க வேண்டும். அதன்படி உடனே நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் போது யாரும் வீடியோ எடுக்காமல் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களுக்காகதான் நாம் இருக்கிறோம். அவர்கள் கொடுக்கும் பணத்தில் தான் நமக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.

அதேபோல் குழந்தைகளை எந்த காவல் நிலையத்திற்கும் அழைத்து செல்ல கூடாது. 19 வயது சிறுவன் நம்ம சட்டையை பிடித்தால் கூட நாம் ஒதுக்கி விட்டுவிட்டு அறிவுரை கூறி அனுப்பி விட வேண்டும். அதேபோல் பெண்களை யாரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல கூடாது. குறிப்பாக ஊரடங்கு நேரத்தில் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து செல்ல கூடாது. கொலையை ஒரு பெண் செய்து இருந்தாலும் இந்த சமயத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல கூடாது. நீங்கள் முறையாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு தகவல் கொடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: