மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் 65 வயது முதியவரும் தபால் ஓட்டு போடலாம்: தேர்தல் ஆணையம் சலுகை

புதுடெல்லி: கொரோனாவில் இருந்து முதியவர்களை பாதுகாக்கும் பொருட்டு, மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் தபால் ஓட்டு போடுபவர்களுக்கான வயது வரம்பு 80ல் இருந்து 65 ஆக தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது. மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் பாதுகாப்பு படை வீரர்கள், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமே தபால் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டு வந்தனர். பின்னர், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் தபால் ஓட்டு போட அனுமதிக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் விதிகளை சட்ட அமைச்சகம் திருத்தியது.

இந்நிலையில், கொரோனா பரவலைத் தொடர்ந்து முதியவர்களின் பாதுகாப்பு கருதி, தபால் ஓட்டு போடுவதற்கான வயது வரம்பு 80ல் இருந்து 65 ஆக குறைக்கலாம் என மத்திய சட்ட அமைச்சகத்திற்கு  தேர்தல் ஆணையம்  பரிந்துரைத்தது. அதை ஏற்ற சட்ட அமைச்சகம் கடந்த 19ம் தேதி தேர்தல் விதியில் மாற்றம் செய்திருப்பதாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதி வரை கொரோனா பாதிப்பு நீடிக்கும் என நிபுணர்கள் கூறியிருக்கும் நிலையில், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கொரோனா வைரஸ் எளிதில் தொற்ற அதிக வாய்ப்பிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த வயதுப்பிரிவில் வரும் முதியவர்கள், படிவம் 12டியை பூர்த்தி செய்து கொடுத்தால் தபால் ஓட்டு போட அனுமதிக்கப்படுவர் என்றும் அவர்கள் கூறினர்.

கொரோனா நோயாளியும்...

இந்த புதிய அறிவிப்பின் மூலம், கொரோனா பாதித்தவர்கள், பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களும் தபால் ஓட்டு போட அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகாருக்கு முதல் வாய்ப்பு கொரோனா வைரஸ் ஏற்பட்ட பிறகு, நாட்டில் முதல் தேர்தலை சந்திக்கும் மாநிலம் பீகார். இத்தேர்தலில் வாக்களிக்க உள்ள முதியவர்கள், தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய சலுகையை பயன்படுத்த உள்ளனர்.

Related Stories: