காரியாபட்டியில் நிச்சயதார்த்தம் நடந்த பெண்ணுக்கு கொரோனா: பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை

காரியாபட்டி: காரியாபட்டியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தபோதே, அதில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் தாலுகா அலுவலகம் முன்பு விதை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் காரியாபட்டி, பாண்டியன் நகரைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் பணியாற்றி வரும் கோவில்பட்டியை சேர்ந்தவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் மற்றும் நிறுவனர் மற்றும் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவில் 25 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை காவல்துறை, சுகாதாரத்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அந்த பெண்ணிற்கு நிச்சயதார்த்தம் நடந்துக் கொண்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டவர்களை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பெண் வசித்து வந்த பாண்டியன் நகர் பகுதி முழுவதும் காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: