அடுத்த கோயம்பேடாக மாறும் மதுரை பரவை காய்கறி சந்தை: 25 பேருக்கு கொரோனா பாதிப்பு; 2000 பேரை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு!!

மதுரை : சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று மதுரை பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் பரவிய கொரோனா தொற்றில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு பணியாற்றிய 2000 பேரை கண்காணிக்கவும் நூற்றுக்கணக்கானோரை தனிமைப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1,073 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனாவுக்கு மதுரையில் இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரையில் நேற்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் போன்றே பரவை மார்க்கெட்டிலும் கொரோனா தாக்கம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல் சந்தை மூடப்பட்டு நான்கு வெவ்வேறு இடங்களில் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பரவை காய்கறி சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் பணியாற்றியவர்கள் விவரம் பெறப்பட்டு 1009 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 பேருக்கு தீவிர தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமை மையத்திற்கு அழைத்து வர சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பரவை சந்தையில் பணியாற்றியவர்கள் உடன் அடுத்தடுத்து தொடர்பில் இருந்தவர்கள் என 2000 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

Related Stories: