23ம் தேதி தொடங்க இருந்த பூரி ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழாவுக்கு தடை

புதுடெல்லி :  ஒடிசா  மாநிலத்தின் கடற்கரையோர பகுதியான பூரியில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட  ஜெகன்நாதர் கோயில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயிலில் ஆண்டு  தோறும் 12 நாட்கள் தேர் திருவிழா நடைபெறும். இந்த விழாவை காண்பதற்காக  ஒடிசா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள்.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில்  23ம் தேதி தொடங்க உள்ள தேர் திருவிழாவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி,  ஒடிசாவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில்  பொதுநலன் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான மனு, உச்ச நீதிமன்ற தலைமை  நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ஏஎஸ்  போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை  விசாரித்த நீதிபதிகள், ‘பொதுமக்களின் உடல் நலன், பாதுகாப்பு  கருதி இந்த ஆண்டு பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது,’ என்று உத்தரவிட்டனர். 

Related Stories: