ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்கு பின் தமிழரின் தொன்மை வெளிப்படும்: கலெக்டர் பெருமிதம்

செய்துங்கநல்லூர்:  ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வு முடியும் போது தமிழரின் தொன்மை வெளிப்படும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். உலக நாகரீகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில், கடந்த மே 25ம் தேதி  முதல் தமிழக அரசு சார்பில் இயக்குநர் பாஸ்கர் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் லோகநாதன், மாணவர்கள் பங்கேற்ற அகழாய்வு பணி துவங்கியது. 15 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு 40 பேர் அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். ஆய்வின் போது சிறு சிறு ஓடுகள், வட்ட வடிவில் உலை போன்ற அமைப்பு தெரிந்ததை ஆய்வாளர்கள் நுண்ணியமாக ஆய்வு செய்து வருகின்றனர். மனிதர்கள் வாழ்விடத்தினை தேடி ஆதிச்சநல்லூர் குளத்துகரை, வீரளப்பேரி உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வு நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த பகுதிகளை கலெக்டர் சந்தீப்நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரை அகழாய்வு இயக்குநர் பாஸ்கரன், தொல்லியல் அலுவலர் லோகநாதன் வரவேற்றனர். பாண்டியராஜா கோயில் அருகே தோண்டப்பட்ட குழி, அங்கு கிடைத்த பல்வேறு பொருட்கள், முதுமக்கள் தாழிகள், மோதிரம், அகல்விளக்கு, புகைப்பிடிக்கும் குழாய், வளையல் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளையில் தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. 2800 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறைகள், இறந்தவர்களை எப்படி அடக்கம் செய்துள்ளனர் என்பதை கண்டறியும் பணிகள் நடக்கிறது. ஆதிச்சநல்லூரில் மோதிரம், பழங்காலத்தில் புகைப்பிடிக்க பயன்படுத்திய குழாய் போன்றவை கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

ஆதிச்சநல்லூர், சிவகளையில் கிடைக்கும் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தும்போது அந்த காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் தொன்மை நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிய வரும் என்றார். ஆய்வின்போது வைகுண்டம் தாசில்தார் சந்திரன், கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், யூனியன் ஆணையாளர் சுப்புலெட்சுமி, கூடுதல் தாசில்தார் ரமேஷ், சங்கரநாராயணன், வருவாய் ஆய்வாளர் அய்யனார், விஏஓ மணிமாலா, இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பஞ். தலைவர்கள் கருங்குளம் உதயசங்கர், ஆறாம்பண்ணை சேக் அப்துல்காதர், ஆதிச்சநல்லூர் பஞ். முன்னாள் தலைவர் சங்கர்கணேஷ், பஞ். எழுத்தர் சோமு, சங்கரபாண்டியன், ராமையா, முத்துராமலிங்கம், சித்தார்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பனை ஓலையில்  முதுமக்கள் தாழி

ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் பார்வையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது. கருங்குளத்தை சேர்ந்த பனை தொழிலாளி பால்பாண்டி, வித்தியாசமான முயற்சியாக பனை ஓலையில் முதுமக்கள் தாழியை செய்து வர்ணம் தீட்டி கலெக்டரிடம் பரிசாக கொடுத்தார். அதனை பெற்றுக் ெகாண்ட கலெக்டர் தொழிலாளியை பாராட்டினார். பால்பாண்டி ஏற்கனவே காமராஜர், அப்துல்கலாம், ஏர் உழவன் போன்ற உருவங்களை பனை ஓலையில் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தாமிரபரணி சுத்தப்படுத்தும் பணி

தாமிரபரணி கரையை சுத்தப்படுத்தும் பணியை மீண்டும் துவங்க வேண்டுமென எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த கலெக்டர், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையை மீண்டும் சுத்தப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Related Stories: