கொரோனா பரவலைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி இன்று, நாளை ஆலோசனை: தமிழக முதல்வருடன் 17ம் தேதி கலந்துரையாடல்

புதுடெல்லி: பிரதமர் மோடி கொரோனாவை தடுப்பது, கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுனர்கள், அரசு நிர்வாகத்தினருடன் இன்றும் நாளையும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் மோடி நடத்தும் 6வது ஆலோசனைக் கூட்டமாகும். மாநில முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதால், கடந்த சனிக்கிழமையே கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்ட தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பாதித்தோர், பலியானோர் குறித்த விவரங்களை பிரதமர் மோடி சேகரித்துள்ளார்.

இதனிடையே டெல்லியில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், அம்மாநில முதல்வர், ஆளுனர், அரசு உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை, சுகாதாரத் துறை அமைச்சர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி பரிந்துரைத்தார். இதையடுத்து, நேற்று அமித்ஷா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா பரிசோதனையை இரண்டு, மூன்று மடங்காக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசிக்க உள்ளார். வீடியோ கான்பரன்சிங்கில், பஞ்சாப், அசாம், கேரளா, உத்தரகாண்ட், ஜார்கண்ட், திரிபுரா, இமாச்சல், சண்டிகர், கோவா, மணிப்பூர், நாகலாந்து, லடாக், புதுச்சேரி, அருணாச்சல், மேகாலயா, மிசோரம், அந்தமான் நிகோபர் தீவுகள், தாதர் நாகர் ஹவேலி, டாமன் டையூ, சிக்கிம், லட்சத்தீவு ஆகிய 21 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், ஆளுனர்கள், அரசு நிர்வாகத்தினருடன் பிரதமர் மோடி இன்று மதியம் கலந்துரையாட இருக்கிறார்.

நாளை அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உ.பி., ம.பி., மேற்கு வங்கம், கர்நாடகா, பீகார், ஆந்திரா, அரியானா, ஜம்மு காஷ்மீர், தெலங்கானா மற்றும் ஒடிசா  உள்பட 15 மாநில முதல்வர்கள்,  ஆளுனர்களுடனும், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில யூனியன் பிரதேச அரசுகளுடனும்  பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: