உணவு பொருட்களில் உட்புகுந்த கலப்படம்

கலப்படத்தை தடுக்க ‘உணவு கலப்படத்தடை சட்டம்’ 1954ல் ஏற்படுத்தப்பட்டது, கலப்படம் செய்த உணவு வகைகள், உடலுக்கு தீங்கு விளைவிப்பதை உற்பத்தி செய்வது, விற்பது, தடை பொருட்களை உணவில் சேர்ப்பது போன்றவைகள் மீது இச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், இச்சட்டம் நீக்கப்பட்டு ஆகஸ்ட், 2011 முதல் “உணவுப் பாதுகாப்புத் தரச்சட்டம் 2006’ அமலுக்கு வந்து, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, பாதுகாப்பற்ற உணவு என்ற நிலையில், இச்சட்டத்தின் கீழ் அபராதம், சிறைத்தண்டனை என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக உணவு பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பொதுமக்களிடமிருந்து கலப்படம் உள்ளிட்ட உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை பெறும் வகையில், ‘94440 42322’ என்ற வாட்சப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்சப் எண்ணிற்கு, இந்த கொரோனா காலத்தில் அதிகளவில் உணவு, குடிநீர் சார்ந்தே அதிக புகார்கள் வந்தன. வாட்சப் புகார் வசதி 2017 மே 17ல் துவக்கப்பட்டது. கடந்த மே 30 வரையிலும் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 13 ஆயிரத்து 471 புகார்கள் வந்துள்ளன. இதில் உணவுப்பொருட்களில் கலப்படம் இருப்பதாகவும், கெட்டுப்போன பழைய இறைச்சி, மீன் விற்பனை, கெட்டுப்போன குடிநீர் விநியோகம் என பலதரப்பட்ட புகார்கள் வந்தன. மாவட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைத்து வருகிறோம். இதன்பேரில் ஆய்வு செய்து, மாதிரிகளை ஆய்வக பரிசோதனை செய்து, நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு சில்லரை விற்பனை விலையை கடந்து அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்வதாக பெறப்பட்ட புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் துறையினரே நடவடிக்கை எடுக்கலாம் என்பதால், அவர்களுக்கு அனுப்பி வைத்தோம். கலப்படத்தை முழுமையாக தடுப்பதில் பொதுமக்களின் விழிப்புணர்வுதான் முக்கியம்’’ என்றார்.

ஊரடங்கின்போது பாக்கெட் எண்ணெய்களை தவிர்த்து, செக்கு எண்ணெய்களை பயன்படுத்தும் ஆர்வம் மக்களுக்கு அதிகரித்தது. முன்பு எல்லாம் மாடுகள் பூட்டி செக்குகளில் நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகள் ஆட்டி எடுக்கப்பட்டன. பிறகு, இவை இயந்திரச் செக்குகளாகின. எள்ளுடன் கருப்பட்டி அல்லது பனைவெல்லம் சேர்த்து ஆட்டினர். பின்னாளில், வணிக வருவாய்க்காக கருப்பட்டிக்குப் பதில் ‘மொலாசியஸ்’ என்ற சர்க்கரை ஆலைக்கழிவைக் கொட்டி ஆட்டி, நல்லெண்ணெய் எடுத்தனர். இதிலும் கொடுமையாக, எள் இல்லாமலேயே இன்று நல்லெண்ணெய் தயாரித்து விற்கும் மோசடி தலைதூக்கி இருக்கிறது.குப்பையில் கொட்ட வேண்டிய நாள்பட்ட கெட்டுப்போன முந்திரிப்பருப்பை வாங்கி, அதனை செக்கிலிட்டு நசுக்கி கழிவெண்ணெய் எடுக்கப்படுகிறது. விலை குறைந்து விற்கும் பாமாயில் அல்லது ரைஸ் ஆயில் 15 கிலோவுடன், அரைலிட்டர் முந்திரிக் கழிவெண்ணெய் கொட்டிக் கலந்தால் ‘நல்லெண்ணெய்’ வாசத்தில், வண்ணத்தில் கலப்பட எண்ணெய் கிடைக்கிறது. இந்த போலி எண்ணெயை, நல்லெண்ணெய் பெயரில் மூன்று மடங்கு விலையில் விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர். சிலர் ‘தீப உபயோகத்திற்கு’ எனும் பொருள்பட ‘லைட்டிங் பர்ப்பஸ்’ என சிறு எழுத்தில் அச்சிட்டுக் காட்டியும் ஏமாற்றி, உணவுக்கான எண்ணெய்யாகவே விற்று விடுகின்றனர்.

பருத்த தேங்காய்களை உடைத்து, காயவிட்டு செக்கில் இட்டு ஆட்டி எடுத்தே எண்ணெய் பெறலாம். ஆனால், தேங்காய் இல்லாமலே ‘மினரல் ஆயிலில்’ தயாரித்த, தேங்காய் எண்ணெய் விற்பனையும் நம்மூர்களில் இருப்பது அதிர்ச்சிகரமானது. பொதுவாக கச்சா எண்ணெய்யை சுத்திகரித்தே பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு துவங்கி ரோட்டுக்கான தார் வரை 24 வகைப் பொருட்கள் பெறப்படுகின்றன. இதில் ஒன்றாகக் கிடைப்பதே ‘மினரல் ஆயில்’. ‘லிக்யூட் பேரபின்’ என்பர்.

நிறம், வாசனையற்ற, அடர்த்திமிகு இந்த மினரல் ஆயிலுடன் தேங்காய் வாசத்திற்கான ‘எசன்ஸ்’ கலந்தால் தேங்காய் எண்ணெய் ரெடியாகி விடுகிறது. ‘மனசாட்சிக்கு சிறிது பயந்த’ சிலர், சிறிதளவு தேங்காய் எண்ணெய்யுடன், மினரல் ஆயிலையும் பெருமளவு கலந்தும் விற்கின்றனர். இந்த தேங்காய் எண்ணெய்யை தலைக்கு தடவினால் தோல் வறண்டு போகும். தலைமுடி தன் ஜீவனை இழக்கும். பலருக்கும் ஒவ்வாமையில் முடி கொட்டும். சீக்கிரமே நரைத்துப் போகும். இதுதவிர, ஹேர் ஆயில்கள், சோப்புகள், முக லோஷன்களிலும் கூட இந்த ‘மினரல் ஆயில்’ அரக்கன் இருக்கிறான்.

பச்சிளங்குழந்தைகளுக்கான முழு உணவே பால் தான். எளிதில் உறிஞ்சும் கால்சியம் கொண்டதால் குழந்தைகளுடன், முதியவர்களுக்கும் பால் தான் முக்கிய உணவு. கால்சியம், தாது, புரதம், ரைபோபினேவின் எனும் பி2, வைட்டமின் ஏ, பாஸ்பரம், தயாமின் என எண்ணற்ற சத்துகளிருப்பதால், நோயாளிகளுக்கான திடத்தையும் பால் தருகிறது. மதுரை கீழமாசி வீதி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்டார்ச், மக்காச்சோள மாவு என எழுதப்பட்ட 65 மூட்டைகள் சிக்கின. இவற்றைப் பிரித்து சோதனையிட்டதில் நாக்கில் வைத்தால் எரிச்சலூட்டிய இது ஒருவித ரசாயனப் பவுடராக அது இருந்தது. பால், ஐஸ்கிரீம், பிஸ்கெட்டில் இதனைப் பயன்படுத்துவதும், 10 லிட்டர் தண்ணீரில் இந்த ரசாயனப் பவுடரை ஒரு கிலோ கலந்தால், ‘பால் தன்மை’ வந்ததும் அதிர்ச்சி தந்தது. இந்த கெமிக்கல் பால் தென்மாவட்டங்களில் அதிகளவில் விற்பனையானதும் தெரிந்தது. உயிர் பறிக்கும் ஆபத்து கொண்ட இந்த ரசாயனப் பாலை பால்மானி கருவியால் கூட செயற்கையானது எனக் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் அதிர்ச்சித் தகவல். அவ்வப்போது சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும், எனினும் தொடர் கண்காணிப்பின்றி போய் விட்டது. இந்த கொரோனா காலத்தில் இவ்வகை ‘பால் புழக்கமும்’ தென்மாவட்டங்களில் அதிகரித்திருக்கிறது.

மதுரை: கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை கெடுபிடியாக (எப்போது என்கிறீர்களா) கடைபிடித்தபோது, அத்யாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் பட்ட சிரமம் கொஞ்சமா, நஞ்சமா? அந்த நேரத்தில் ஊரடங்கை பயன்படுத்தி கலப்பட பொருட்களை சிலர் களமிறக்கி கொள்ளை லாபம் பார்த்திருக்கின்றனர். உடல்நலனை காக்கும் உணவுப்பொருட்கள் என நம்பி வாங்கியது கலப்படம் என தெரிந்து மக்கள் ஆங்காங்கே கொதித்தெழுந்ததையும் காண முடிந்தது. இனியாவது, கலப்பட விஷயத்தில் அரசு போதிய அக்கறை காட்ட வேண்டுமென கோரிக்கையும் வலுத்துள்ளது. மக்களின் வாழ்வியலை ரொம்பவே கொரோனா ஊரடங்கு காலம் புரட்டிப்போட்டு விட்டது. வணிகமும், தொழிலும், வேலையுமின்றி வருவாய் இழப்பில் மக்களின் பொருளாதாரம் ரொம்பவே சரிந்து போய் விட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில், கடைகள், நிறுவனங்கள் திறக்கப்பட்டும் வருவாய் வாய்ப்புகளை சரிகட்ட முடியாமல் அத்தனை பேருமே திண்டாடி வருகின்றனர். இவ்வகையில், ஒரு சிலர் லாபம் கருதி பொருட்களில் கலப்படம் செய்து, பணம் பார்த்ததுதான் வேதனையானது.

அரிசியில் துவங்கி...

உணவுப்பொருட்களில் கலப்படம் நேற்று, இன்று வந்ததல்ல... பல ஆண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. ஊரடங்கு நேரத்தில் அனைவரும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட ஒரு சில வியாபாரிகள், தாங்கள் ஸ்டாக் வைத்திருந்த அரிசியோடு தரமற்ற அரிசி, சிறுகற்கள், மண், நெல், தவிடு என கலந்து கட்டி விற்பனை செய்துள்ளனர். அதுமட்டுமல்ல... துவரம் பருப்பில் கேசரி வகை, ரேஷனில் தரும் தரம் குறைந்த பருப்பை சேர்ந்து நயம் துவரை விலைக்கு விற்றுள்ளனர். உளுந்தம்பருப்பிலும் களிமண் உருண்டைகள், சிறு கற்களைக் கலந்து தந்துள்ளனர். இதனால் பலர் கொரோனா காலத்தில் வயிற்று உபாதை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகினர். பொதுவாக, இவ்வாறு தரமற்ற பொருட்களை சாப்பிடும்போது புற்றுநோய், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

மஞ்சள் தூளா, மங்கல் தூளா...?

ஊரடங்கின்போது மக்கள் மஞ்சள் தூள்களையே அதிகம் வாங்கினர். அதுமட்டுமன்றி குழம்பு மிளகாய் பொடி, மல்லிப்பொடி போன்றவற்றை அதிகம் ஸ்டாக் வைத்தனர். துவக்கத்தில் பிராண்டட் தூள்களை வழங்கி வந்த கடைகள், பின்னர் மிளகாய் தூளில் செங்கல்பொடி, மல்லித்தூளில் மரத்தூள், குதிரை சாணம், மஞ்சள் தூளில் காரிய குரோமேட் மற்றும் மெட்டானில் எல்லோ ரசாயனம் கலந்து பெயரிடப்படாத பாக்கெட்களில் அடைத்து விற்று வந்துள்ளனர். இதுபோன்ற நாம் அதிகம் பயன்படுத்தும் தூள் வகைகளில் கலப்படம் செய்யும்போது, நுரையீரல், மார்பு, தொண்டை, கண், எலும்பு மற்றும் கல்லீரல் கட்டி, குழந்தைகள் ஊனமுறுதல் உள்ளிட்ட நோய் பிரச்னைகள் உருவாகின்றன.

நெய்யா... பொய்யா...?

தூள் வகைகள் மட்டுமா? உடல் திறனை வலுப்படுத்த நெய், வெண்ணெய் என வாங்கிக் குவித்த பொருட்களிலும் கலப்படம் புகுந்து விளையாடியது. நெய்யில் வனஸ்பதி, மிருகக்கொழுப்பு, வெண்ணெயில் மைதா, மணிலா மாவுகள் கலந்து விற்பனையானது. இது இருதய அடைப்பை, முகம் வீக்கத்தை, வயிற்றுக்கோளாறை ஏற்படுத்துகிறது. தேனில் சர்க்கரை, வெல்லப்பாகு, மிளகில் பப்பாளி விதை கலந்தும் உடல்நலனை ஒரு வழி ஆக்கி விடுகின்றனர். பொதுவான காலத்து இந்த கலப்படங்களையும் மிஞ்சி, இந்த கொரோனா நேரத்தில் ‘லாபத்தை மட்டுமே’ நோக்கமாகக் கொண்டு, கலப்படத்தின் வீரியம் மேலும் அதிகரித்துள்ளது. அரசின் அக்மார்க் முத்திரை பெற்ற பொருட்களை வாங்க அறிவுறுத்தப்பட்டபோதும், அந்த முத்திரையுடன் விற்கும் பொருட்களுமே ‘சந்தேகம் தரும்’ பொருட்களாகவே இருந்து வருகின்றன.

இறைச்சி.. ‘இரை...’ச்சீ...

கொரோனா காலத்தில் சிக்கனை சாப்பிட பலர் அஞ்சிய நேரத்தில், ஆட்டிறைச்சியின் விலை அசுரத்தனமாக உயர்ந்தது. கிலோ ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையானது. இதனால் லாபநோக்கில், சில கடைகளில் மாட்டிறைச்சியை, ஆட்டிறைச்சியாக ‘அடையாளம் காட்டி’ அதிக லாபத்திற்கு விற்கப்பட்டது. இதனால் கறி வேகாமலும், வழக்கமான சுவை இல்லாததால், பலர் ஆட்டுக்கறி உண்பதையே குறைத்துக் கொண்டனர். பண்ணைகளில் இறக்கும் கோழிகளும் ‘ப்ரீசரில்’ வைக்கப்பட்டு, விற்பனைக்கென கடைத்தெருக்களுக்கு வந்து விடுகின்றன.

தடைக்குள் தடை...

கொரோனா காலத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்காலமும் வந்தது. ஒரு சில கடலோர பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று வந்தனர். இதனால் சாதாரண மீன் விலையை கூட கிலோ ரூ.300 - ரூ.500 வரைக்கும் எகிற வைத்து விட்டனர். இது ஒருபுறமிருக்க, மீன்கள் பல நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க, ‘சடலங்களுக்கு’ பயன்படுத்தப்படும் ‘பார்மலின்’ ரசாயனம் தடவி விற்கப்பட்ட அவலமும் மதுரையில்தான் நடந்தது.

பிளாஸ்டிக் அரக்கன்...

தொழில்நுட்பத்தின் உச்சமாக இக்காலத்தில் ‘பிளாஸ்டிக் உணவுகள்’ வருகையும் பெரும் அச்சத்தைத் தந்துள்ளது. மண்ணுக்குள் கிடந்தாலும், மக்கிப்போக முடியாத இந்த பிளாஸ்டிக்குகளை உண்டால், உணவுக்குழாய் துவங்கி, செரிமான உறுப்புகள் வரையிலும் அத்தனை இயக்கத்தையும் கெடுத்து, உண்டவரின் உயிர் எடுத்து விடும் கொடூரத்தை நிகழ்த்தி விடுகிறது. பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரசி, பிளாஸ்டிக் சர்க்கரை வரையிலும் தமிழகத்துடன், தென்மாநிலங்களிலும் ஊடுருவி இருக்கிறது. இதனால் வயிற்று வலியில் துவங்கி, செரிமான கோளாறில் பயணித்து, வாந்தி மயக்கம் ஏற்பட்டு, இதனை தொடர்ந்து உண்டால், புற்றுநோய், சிறுநீரக கோளாறு, மாரடைப்பு, ரத்தக்குழாய் வெடிப்பு வரையிலும் கொண்டுபோய் உயிர் பறிக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். கொரோனா தடுப்பு ஊரடங்கை பயன்படுத்தி கலப்பட பொருட்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி, கலப்பட பொருட்களை விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டுமென மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: