பெண் போலீஸ்காரர்களை தொடர்ந்து மதுக்கடையில் ஆசிரியர்களுக்கு வேலை

போபால்: மத்திய பிரதேசத்தின் ரேவாவில் பெண் போலீஸ்காரர்களுக்கு மதுக்கடையில் பணி கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆசிரியர்களுக்கும் அதே பணி கொடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சாகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு கடந்த 10ம் ேததி ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது கல்லூரியின் 5 ஆசிரியர்கள் மதுபானக் கடையில் பணியாற்ற வேண்டும் என்று, மாவட்ட துணை கலெக்டர் (கலால்) அலுவலகத்தில் இருந்து வந்த அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் நேற்று சமூக ஊடகங்களில் வெளிவந்ததால், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ​மாநில ​காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் ரேவா நகரில் உள்ள மதுபானக் கடையில் பெண் போலீஸ்காரர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அதன்படி பெண் போலீஸ்காரர் மதுக்கடையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானது. மேற்கண்ட படங்கள் வைரலாகியது தொடர்பாக ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கண்டனங்களை எழுப்பியது. முன்னதாக மாநில மதுபான ஒப்பந்தக்காரர்களுடனான பிரச்னையால், சுமார் 70 சதவீத மதுபான ஒப்பந்தக்காரர்கள் தங்கள் ஒப்பந்தங்களை அரசிடம் திருப்பி ஒப்படைத்தனர். அதனால், மதுபானக் கடையை கலால் துறையே இயக்க முடிவு செய்தது.

இதற்காக, முதலில் பெண் போலீஸ்காரர்கள் மதுபானக் கடையில் பணி அமர்த்தப்பட்டனர். இப்போது ஆசிரியர்களுக்கு அந்த வேலை கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் யாதவ் குற்றம்சாட்டினார். மதுக்கடையில் போலீஸ்காரர், ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்ட விவகாரம், அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: