மாநில முதல்வர்களுடன் 16, 17ல் மோடி ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு, ஊரடங்கு நிலவரம் குறித்து வரும் 16. 17ம் தேதிகளில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.  நாட்டில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இது, வரும் 30ம் தேதி நீடிக்கிறது. இந்நிலையில், இந்த ஊரடங்கின் நிலவரம், தளர்வுகள் மற்றும் கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 16, 17ம் தேதிகளில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச முதல்வர்களுடன் காணொளி மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, வரும் 16ம் தேதி பஞ்சாப், அசாம், கேரளா, உத்தரகாண்ட், சட்டீஸ்கர், திரிபுரா, இமாச்சல பிரதேசம், கோவா, மணிப்பூர், நாகலாந்து, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, சிக்கிம், மிசோரம் முதல்வர்களுடனும், லடாக், அந்தமான் நிகோபர், தாதர் நகர் ஹவேலி, டாமன் டயூ மற்றும் லட்சத்தீவு துணை நிலை ஆளுநர்களுடனும் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

அதற்கு மறுநாள், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, புதுடெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, பீகார், ஆந்திரா, அரியானா,  தெலங்கானா, ஒடிசா முதல்வர்களுடனும், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநருடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஏற்கனவே, மத்திய அரசு இதுவரை மாநில முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் ஐந்து முறை ஆலோசனை நடத்தி இருக்கிறது. இதில், 5வது முறையில் மோடிக்கு பதிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: