ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு ஆட்சியில் நடந்த ஊழல் பற்றி சிபிஐ விசாரணை: முதல்வர் தலைமையிலான அமைச்சரவையில் முடிவு

திருமலை:  ஆந்திராவில் சந்திரபாபு ஆட்சியில் நடந்த ஊழல்களை சிபிஐ விசாரிக்க பரிந்துரைத்து முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. ஆந்திராவின் குண்டூர் அடுத்த தாடேபல்லியில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை  வரும் 16ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர், செய்தி துறை அமைச்சர் பேர்னி நானி நிருபர்களிடம் கூறியதாவது:

சந்திரபாபு ஆட்சியில் தொடங்கப்பட்ட  ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு, கேபிள்,  போன் இணைப்பு வழங்கும் பைபர் நெட் வழங்கியதில் ₹200 கோடி ஊழல் மற்றும் சங்கராந்தி, கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வழங்கப்பட்ட சந்திரண்ணா காணிக்கைக்காக நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில் ₹150 கோடி வரை ஊழல் நடந்துள்ளது அமைச்சர்கள் தலைமையிலான சப்-கமிட்டி விசாரணையில் தெரியவந்தது. எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது என்றார்.

Related Stories: