வெளிமாநில தொழிலாளர்களை அனுப்ப எத்தனை ரயில்கள் தேவை என்று உடனே கூறுங்கள் : மாநிலங்களுக்கு வாரியம் கடிதம்

புதுடெல்லி: தங்கள் மாநிலங்களில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களை அனுப்பி வைப்பதற்காக எத்தனை ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் தேவை என்பதை மாநில அரசுகள் உடனே தெரிவிக்க  வேண்டும் என  ரயில்வே வாரியம் வலியுறுத்தி உள்ளது.  ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ள நிலையில் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவர் விகே யாதவ், அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் உடனடியாக கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பி வைப்பதற்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் ஏற்கனவே கேட்கப்பட்டுள்ள 171 சிறப்பு ரயில்களுடன், மேலும் கூடுதலாக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் தேவைப்பட்டால், 24 மணி நேரத்துக்குள் ரயில்வேயிடம் தெரிவிக்கும்படி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக சிறப்பு ரயில்கள் தேவை என்றால் உடனடியாக 10ம் தேதிக்குள் (இன்று) ரயில்வே துறைக்கு தெரிவிக்க வேண்டும். புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை, இறங்கும் ரயில் நிலையங்கள், அட்டவணை மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: