மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகள் என்பவை புதிய நாகரிகமாக மாறி வருகின்றன. வகுப்பறைக்  கல்வி முறைக்கு எந்த வகையிலும் ஈடாக முடியாத ஆன்லைன் கல்வி முறை தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் பணம் பறிக்கும் புதிய உத்தியாக மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆக்கப்பூர்வமாக பயனளிக்காத இந்த முறையை பள்ளிக்கல்வித்துறை ஊக்குவிப்பது வருத்தமளிக்கிறது. ஆன்லைன் வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்துவதன் நோக்கம் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தர வேண்டும் என்பதை விட மாணவர்களின் பெற்றோரிடமிருந்து கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பது தான்.  ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதை விட, கல்விக் கட்டணம் செலுத்தாவிட்டால் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாது என்று கூறி பெற்றோரிடம் பணம் பறிப்பது தான் அதிகமாக நடக்கிறது.

கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளியின் வாட்ஸ் அப் குழுவில், பணம் செலுத்தாத குழந்தைகளை ஆன்லைன் வகுப்புகளில் இருந்து  நீக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறிய செய்தியை பகிர்ந்ததற்காக 100 மாணவர்களை பள்ளியிலிருந்து நிர்வாகம் நீக்கியிருக்கிறது.  இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. ஆன்லைன் வகுப்புகளால் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது.  பள்ளிகள் சில மாதங்கள் தாமதமாக தொடங்கப்படுவதாலோ, தாமதமாகும் காலத்தில் மாணவர்கள் பாடங்களை படிக்காததாலோ எந்த பாதகமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே, அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். அதற்கு மாற்றாக, பள்ளிகள் எவ்வளவு தாமதமாக திறக்கப்படுகின்றனவோ, அதற்கு ஏற்ற வகையில் பாடங்களின் அளவை குறைக்க தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: