பீகார் சட்டப்பேரவை தேர்தல்: தேஜஸ்வி தலைமைக்கு எதிர்ப்பு: மெகா கூட்டணியில் விரிசல்

பாட்னா: பீகாரில் 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, கொரோனா பாதிப்புக்கு இடையிலும் கூட்டணிக்கான பேச்சு களைகட்டி உள்ளது. இம்முறை ஆளும் ஐக்கிய ஜனதா  பாஜ கூட்டணியை எதிர்த்து 5 எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்க முயற்சிகள் நடக்கின்றன. இது தொடர்பாக லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜியின் எச்ஏஎம், ஆர்எல்எஸ்பி, விஐபி ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

Advertising
Advertising

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையிலேயே இதில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மஞ்ஜியின் வீட்டில் காங்கிரஸ், ஆர்ஜேடி அல்லாத மற்ற இரு கட்சி தலைவர்கள் நீண்ட ஆலோசனை நடத்தி உள்ளனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக ஆர்ஜேடி அதிருப்தி அடைந்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில், ‘‘கூட்டணி அமைக்க விரும்புபவர்கள், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வியின் தலைமையை விரும்பவில்லை என தெரிகிறது.

தேஜஸ்வி தலைமை ஏற்றால் மட்டுமே கூட்டணி என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’’ என்றார். ஆர்ஜேடி தனித்து செயல்படுவதால், ஆளும்கூட்டணியை வீழ்த்துவதில் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை சீர்குலைவதாக மஞ்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா இன்று டிஜிட்டல் பேரணி

பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை டிஜிட்டல் பேரணி மூலமாக பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார். பேஸ்புக் லைவ் வழியாக வீடியோ கான்பரன்சிங் மூலமாக இந்த டிஜிட்டல் பேரணி நடத்தப்பட உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 72,000 தேர்தல் பூத்களிலும் அமித்ஷா பிரசாரத்தை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கேட்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆட்டா...டேட்டா...

‘ஏழைகள் ஆட்டாவுக்கே (கோதுமை) வழியில்லாமல் இருக்கிறார்கள், நீங்கள் டேட்டாவை வைச்சு என்ன செய்யப் போறீங்க’ என அமித்ஷா டிஜிட்டல் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ஜேடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

Related Stories: