சேமநல நிதி; ரூ.74 லட்சம் கையாடல் வழக்கு: ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களிடம் 2.45 மணி நேரம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி

ராமேஸ்வரம்:  ராமேஸ்வரம் கோயில் பணியாளர்களின் சேமநல நிதி ரூ.74 லட்சம் கையாடல் வழக்கு குறித்து, நேற்று தேவஸ்தான அலுவலகத்தில் ஊழியர்களிடம், சிபிசிஐடி அதிகாரிகள் 2.45 மணி நேரம் விசாரணை நடத்தினர்.  ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கடந்த ஆண்டு கோயிலில் பணியாற்றி வரும் ஊழியர்களின் சேமநல நிதி பணம் ரூ.74.24 லட்சம் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து கையாடல் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, கோயில் ஊழியர் ரவீந்திரன், தற்காலிக கம்ப்யூட்டர் ஊழியர் சிவனருள்குமரனை கைது செய்தனர். விசாரணையில், இருவரும் கோயில் பணியாளர்கள் பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால் இவ்வழக்கு கிடப்பில் போடப்பட்டது. பின்னர் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி, இவ்வழக்கு ராமநாதபுரம் சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள ரவீந்திரன் மற்றும் சிவனருள்குமரனிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பணம் கையாடல் சம்பவத்தில் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், மேலும் முக்கிய தகவல்கள் பலவற்றையும் இருவரும் கூறியதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் சிபிசிஐடி எஸ்ஐ சரவணக்குமார் தலைமையிலான போலீசார், நேற்று ராமேஸ்வரம் கோயிலில் விசாரணை நடத்தினர். ராமநாதசுவாமி கோயில் தேவஸ்தான அலுவலகத்திற்குள் நேற்று காலை 11.30 மணிக்கு சென்றவர்கள் மதியம் 2.15 மணிக்கு விசாரணையை முடித்து வெளியேறினர். இதில் பல ஊழியர்களிடம் விசாரணை நடந்துள்ளது. சுமார் 2 மணி 45 நிமிடங்கள் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது. விரைவில் முக்கிய குற்றவாளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக பணத்தை இழந்த கோயில் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் கோயிலுக்குள் 2.45 மணி நேரம் நடந்த விசாரணையால், பக்தர்கள் மற்றும் பொது மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர் சர்ச்சையில் சிக்கும் நிர்வாகம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கடந்த ஆண்டு துவங்கி ஊழியர்கள் சேமநல நிதி பணம் கையாடல், தரிசன டிக்கெட் விற்பனை முறைகேடு, ராமநாதசுவாமி கருவறைக்குள் உள்ள மூலவர் லிங்கத்தை மொபைலில் படம் பிடித்து விற்பனை செய்தது, கோதண்டராமர் கோயில் உண்டியல் உடைப்பு, கலசம் திருட்டு, தீர்த்தக்கட்டணம் அனுமதி கைப்பட்டை விற்பனையில் முறைகேடு, கொரோனா ஊரடங்கின்போது சித்திரை மாத முதல் தேதியில், கோயில் கருவறைக்குள் யாரும் இல்லாத நேரத்தில் போலீசார் ஒருவர் உள்ளே சென்றது என சர்ச்சைக்குரிய பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

முன்னாள், இன்னாள் அதிகாரிகளிடமும் விசாரணை?

ஊழியர்கள் சேமநலநிதி பணம் கையாடல் வழக்கு தொடர்பாக ராமநாதசுவாமி கோயிலில், கடந்த 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை பணியாற்றிய இணை கமிஷனர்கள், கோயில் மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கில் கைதாகி, ஜாமீனில் வந்திருக்கும் ஊழியர் ரவீந்திரனிடம், கோயில் இணை கமிஷனரால் துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அறநிலையத்துறை உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: