புதுக்கோட்டை அருகே சிறுமி மர்ம சாவில் அதிரடி திருப்பம் சொகுசாக வாழும் ஆசையில் மகளை நரபலி கொடுத்த தந்தை: பெண் மந்திரவாதி உள்பட 2 பேருக்கு வலை

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை அருகே சிறுமி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக சொகுசாக வாழும் ஆசையில் மகளை நரபலி கொடுத்த தந்தை, அவரது உறவினர் கைது செய்யப்பட்டனர். பெண் மந்திரவாதி உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(50). இவரது முதல் மனைவி இந்திரா, அவருக்கு வித்யா (14) உள்பட 4 பிள்ளைகளும், 2வது மனைவி மூக்காயி (45)க்கு 2 குழந்தைகளும் உண்டு. இவர்களில் வித்யா 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மே 18ம் தேதி மதியம் வீட்டின் அருகே 1.5 கி.மீ. தொலைவில் உள்ள ஏரிக்கு வித்யா தண்ணீர் பிடிக்க சென்றார். அதன்பிறகு, பெற்றோர் அவரை தேடி சென்றபோது உடலில் காயங்களுடன் கிடந்துள்ளார்.

Advertising
Advertising

அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வித்யா மறுநாள் இறந்தார். இதுெதாடர்பாக கந்தர்வகோட்டை மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், தந்தையும் 2வது மனைவியும் சேர்ந்து சொத்தும், பணமும் பெருக வேண்டும் என்பதற்காக பெண் மந்திரவாதி ஒருவரின் ஆலோசனைப்படி நரபலி கொடுத்தனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பன்னீர்செல்வம் தனது வறுமை மற்றும் பணஆசை காரணமாக புதுக்கோட்டையில் மாந்திரீகம் செய்து வரும் வசந்தியிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது, உனது மகளை நரபலி கொடுத்தால் பணம் பெருகும். உனக்கு மாந்திரீக சக்தியும் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதனையடுத்து பன்னீர்செல்வம் தனது உறவினர் குமார், 2வது மனைவி மூக்காயி ஆகியோருடன் சேர்ந்து சம்பவம் நடந்த அன்று அதிகாலை காட்டுப்பகுதியில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தியுள்ளார். அப்போது தண்ணீர் பிடிப்பதற்கு வந்த மகள் வித்யாவை வழிமறித்து நரபலி கொடுப்பதற்காக கழுத்தை பிடித்து இழுத்துள்ளனர். இதில் அந்த சிறுமி இறந்து விட்டதாக நினைத்து அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

ஆனால், சிறுமி இறக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் திரும்பி வந்த பெற்றோர் யாரோ பலவந்தப்படுத்திவிட்டதாக நாடகமாடி, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து, எஸ்.பி. அருண்சக்திகுமார் நேற்று அளித்த பேட்டி:  நரபலி கொடுத்ததாக பன்னீர்செல்வம், உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மந்திரவாதியான வசந்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த முருகாயி ஆகியோரை தேடி வருகிறோம். இதற்கிடையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக பன்னீர்செல்வத்தின் 2வது மனைவி மூக்காயியும் இறந்துவிட்டார். அவரின் இறப்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories: