நாளையுடன் தடைக்காலம் முடிவடைகிறது தூத்துக்குடியில் விசைப்படகுகள் பராமரிப்பு பணிகள் மும்முரம் : மீனவர்களுடன் சப்.கலெக்டர் ஆலோசனை

தூத்துக்குடி: மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிவடைவதால் விசைப்படகுகள் வரும் 1ம்தேதி முதல் மீன் பிடிக்க செல்கின்றன. இதனால் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மீனவர்களுடன் சப்.கலெக்டர் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, வேம்பார், தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் 45 நாட்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வந்தது. மத்திய அரசு இந்த தடைக்காலத்தை 60 நாட்களாக நீட்டித்து ஜூன் 15 வரை தடை விதித்திருந்தது. இதனால் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய அரசு மீன்பிடி தடைக்காலத்தை முன்பு இருந்தது போன்று 45 நாட்களாக குறைத்துள்ளது. இதனால் தடைக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைவதால் உற்சாகம் அடைந்த விசைப்படகு மீனவர்கள், ஊரடங்கால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் பழுதுகளை சரி செய்தல், மீன்பிடி வலைகள் பின்னுதல், இன்ஜின் கோளாறுகளை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ள படகுகளை மீனவர்கள் கடலில் இரு நாட்களாக இயக்கி பார்த்து வெள்ளோட்டம் விட்டுள்ளனர். மீண்டும் மீன்பிடிக்க செல்வதற்காக படகுகள் தயாரானதையடுத்து நாளை (1ம்தேதி) அதிகாலையில் விசைப்படகுகள் வழக்கம்போல் மீன் பிடிக்க செல்கின்றன. இதையடுத்து நேற்று சப்.கலெக்டர் சிம்ரான் ஜித்சிங் கலோன் தலைமையில் விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர் சப்.கலெக்டர் கூறுகையில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தளமாக கொண்டு 241 பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. இவைகளில் நாளை 1ம்தேதி முதல் நாளொன்றுக்கு 120 படகுகள் வீதம் கடலுக்குச் செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடித் துறைமுகத்துக்கு வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய துறைமுக வாசலில் தெர்மல் இமேஜ் ஸ்கேனர் கருவி பொருத்தப்படும் என்றார்.

Related Stories: