மத்திய பிரதேசத்தில் இருந்து படையெடுத்து வரும் வெட்டுகிளிகளை போட்டுத் தள்ள உபி. தீயணைப்பு படை தயார்நிலை: காற்றின் திசைக்கு ஏற்ப பயணிக்கிறது

ஜான்சி:புலம் பெயரும் பூச்சி இனமான ‘லோகஸ்ட்’ வகையை சேர்ந்த வெட்டுக்கிளிகள், உலகின் பல பகுதிகளிலும் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இது பாகிஸ்தானில் பயிர்களை அழித்து விட்டது தற்போது இந்தியாவில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த மாதம் ராஜஸ்தானில் நுழைந்த வெட்டுக்கிளிகள் பல மேற்கு மாநிலங்களுக்கு பரவி வருகிறது.  ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. சமீபத்தில் ஜெய்ப்பூரில் ஒரு குடியிருப்பு முழுவதையும் வெட்டுக்கிளிகள் ஆக்கிரமித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

தற்போது இவை மத்திய பிரதேசத்தின் தாடியா மாவட்டத்திலும் தென்படுகின்றன. பொதுவாக வெட்டுக்கிளிகள் காற்று வீசும் திசைக்கு ஏற்ப தனது பயணத்தை தொடரும். அந்த வகையில் அடுத்ததாக இவை உத்தரப்பிரதேச மாநிலத்தின் மோத், சம்தார் பகுதிகளில் இருந்து ஜான்சி வந்து அங்கிருந்து ஜலான், ஹமிர்பூர் வழியாக கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகள் மனிதர்களையோ விலங்குகளையோ எதுவும் செய்வதில்லை. பயிர்களை மட்டும் நாசம் செய்யும். எனவே, விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க அரசு எச்சரித்துள்ளது.

மேலும், வெட்டுக்கிளி பயணிக்கும் ஜான்சி உள்ளிட்ட பகுதிகளில் தலா 2 தீயணைப்பு வாகனங்கள் பூச்சிக் கொல்லி மருந்துடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி எல்லைகளில் பூச்சிக்கொல்லி தெளிப்பான்களுடன் மாநகராட்சி ஊழியர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 22, 24ம் தேதிகளில் ஜான்சி மாவட்டத்தில் வெட்டுக்கிளி கூட்டம் வந்துள்ளது. அதில் பாதிக்கும் மேற்பட்டவை கிராம மக்கள் உதவியுடன் அழிக்கப்பட்டது. தற்போது 2ம் அலையில் முழு வெட்டுக்கிளியையும் அழிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

* லோகஸ்ட் பூச்சிகள் வெட்டுக்கிளிகள் குடும்பத்தை சேர்ந்தவை.

* அவை மழைக்காலம் மற்றும் கடுமையான சூறாவளி போன்ற சூழ்நிலைகளில் அதிக இனப்பெருக்கம் செய்கின்றன.

* இவை வேகமாக புலம் பெயரக் கூடியவை. ஒரு நாளில் 50 முதல் 100 கிமீ வரை பறந்து செல்லும்.

* ஆப்ரிக்க நாடுகளில் கடுமையான உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்திய இந்த வெட்டுக்கிளிகள், ஏமன், ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவில் நுழைந்துள்ளது.

* ராஜஸ்தான், குஜராத்தில் அதிகளவு ஆக்கிரமித்துள்ள இந்த வெட்டுக்கிளிகளால் மபி, மகாராஷ்டிரா மாநிலங்களும் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

* ராஜஸ்தானில் தற்போது 100 கிமீ வேகத்தில் வெட்டுக்கிளிகள் நகர்வதால் அவற்றை கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

டிரோன் மூலம் பூச்சிகொல்லி:

ராஜஸ்தான் மாநில வேளாண் துறை, வெட்டுக்கிளிகளை அழிக்க டிரோன்களை பயன்படுத்தி வருகிறது. அங்கு சோமு மாவட்டத்தின் சமோத் பகுதியில் நேற்று டிரோன் மூலம் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. இது குறித்து வேளாண் துறை கமிஷனர் ஓம் பிரகாஷ் கூறுகையில், ‘‘மலைப்பாங்கான மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களால் செல்ல முடியாத மேடான பகுதிகளில் பூச்சிக் கொல்லி தெளிக்க டிரோன்கள் உதவியாக இருக்கின்றன. இதன் மூலம், 15 நிமிடத்தில் 2.5 ஏக்கர் நிலத்தில் மருந்து தெளிக்க முடியும்,’’ என்றார். இதுதவிர ஜோத்பூரில் 800 ஸ்பிரேயர் பொருத்திய டிராக்டர்கள், வெட்டுக்கிளி வருவதை எச்சரிக்கும் கருவிகள் பொருத்திய 54 வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.

ரபி பயிர்களை தாக்கவில்லை:

இந்தியாவில் புகுந்துள்ள வெட்டுக்கிளிகள் ரபி பருவ கால பயிர்களை நாசம் செய்யவில்லை என்றும், வரவிருக்கும் மழைக்காலத்திற்குள் அவற்றை கட்டுப்படுத்தா விட்டால் காரீப் பருவ காலத்தில் அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானிலேயே அவற்றை கட்டுப்படுத்தி இருந்தால், இந்தியாவில் அதனுடைய பாதிப்புகளே இருந்திருக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: