முன்விரோத தகராறில் இருவருக்கு சரமாரி வெட்டு

* 7 வீடுகள் சூறை; மர்மநபர்களுக்கு வலை

* போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முற்றுகை

செய்யூர்,  மே 26: சித்தாமூர் ஒன்றியம் சித்தர்காடு ஊராட்சி பாலையூர் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரி தொகுப்பு வீடுகள் திட்டம், குடிநீர், கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்தல் உள்பட பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தன. இதனை, கிராம மக்களின் சார்பில், அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவக்குமார் (40) தட்டிக்கேட்டு வந்துள்ளார். இதையொட்டி, அதே ஊராட்சியை சேர்ந்த அதிமுக பிரமுகரும் முன்னாள் ஊராட்சி தலைவருமான வீரபத்திரன், அவரது மகன் மணிகண்டன், ஊராட்சி செயலர் ஆகியோர் இடையே, சிவக்குமாருக்கு முன்விரோதம் ஏற்பட்டது. இதனால், கடந்த 2 நாட்களுக்கு முன் எதிர்தரப்பினர், அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீரபத்திரன், மணிகண்டன், இவரது நண்பர்கள் சம்பத், பிரவீன், நவீன் மற்றும் 20க்கும் மேற்பட்டோர், சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கும் பகுதி சென்று, 7 வீடுகள் மற்றும் வீடுகளில் இருந்த பொருட்களை  சூறையாடியுள்ளனர். மேலும், சிவக்குமார் மற்றும் அவரது உறவினரின் தலை, கை, கால்களை வெட்டிவிட்டு தப்பினர். இதில், படுகாயமடைந்த 2 பேரும், செய்யூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். செய்யூர் போலீசில், அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார், புகாரை பெறாமல், அதனை கொடுக்க சென்ற பெண்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொதுமக்கள், திமுக சித்தாமூர் ஒன்றிய செயலாளர் ஏழுமலை, லத்தூர் ஒன்றிய செயலாளர்  ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் சிற்றரசு ஆகியோருடன் சென்று, காவல்  நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அதிமுக பிரமுகரை, கைது செய்ய வலியுறுத்தியும், பெண்களை அவதூறாக பேசிய போலீசாரை கண்டித்தும் கோஷமிட்டனர். பின்னர் காவல் நிலையத்தில் இருந்த போலீசார், முற்றுகையிட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வீரபத்திரன், மணிகண்டன், இவரது நண்பர்கள் சம்பத், பிரவீன், நவீன் மற்றும் 20க்கும் மேற்பட்டோரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவுகிறது.

Related Stories: