கொரோனா ஊரடங்கு அமலால் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் புதிய கட்டுமான பணிகள் நிறுத்தம்

*  மூலப்பொருட்கள் விலை உயர்வு

*  கட்டிடம் கட்டுவோருக்கு கூடுதல் சுமை

சேலம்: கொரோனா ஊரடங்கு அமலால், தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதமாக 50 ஆயிரத்திற்கும் மேலான புதிய கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 4ம் கட்ட ஊரடங்கில் கட்டுமான பணிகள் தொடங்கி இருப்பதால், மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் கட்டிடம் கட்டுவோருக்கு  கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல்கள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்.சாண்ட் உற்பத்தி தொழிற்சாலைகளும், 25 ஆயிரம் செங்கல் சூளையும், நூற்றுக்கும் மேலான சிமெண்ட் தொழிற்சாலைகளும் உள்ளன. இந்த தொழில்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதை தவிர கட்டுமான பணியில் மட்டும் 5லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு தினசரி ₹300 முதல் ₹750 வரை கூலி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தொடங்கிய பின்னர்,  புதிய கட்டுமான பணிகள் அதிகளவில் தொடங்கப்படும். நடப்பாண்டு தை மாதத்தில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. அதன் பின்னர், ஏப்ரலில் புதிய கணக்கு தொடங்கும்போது, ஒரு சிலர் கட்டுமான பணிகளை தொடங்குவர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஏற்கனவே நடந்து வந்த கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. ஏப்ரலில் தொடங்கப்படும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கட்டுமான பணிகளும் தொடங்கப்படவில்லை.

தற்போது 4ம் கட்ட ஊரடங்கில் கட்டுமான பணியை தொடங்கலாம் என அரசு அறிவித்தது. அதன்படி, ஏற்கனவே தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் கடந்த இரு வாரமாக நடந்து வருகிறது. 50 நாட்களுக்கு மேலாக எம்.சாண்ட் தொழிற்சாலை, கம்பி உற்பத்தி செய்யும் ெதாழிற்சாலை, செங்கல் சூளை,  சிமெண்ட் தொழிற்சாலைகள் இயங்காததால்,  கட்டுமான பணிக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், தற்போது கட்டுமான பணிக்கு தேவையான அனைத்து மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக இன்ஜினியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த இன்ஜினியர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசுத்துறை சார்ந்த கட்டிடம், தனியார் கட்டிடம் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஊரடங்கால் கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை 10 முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. ஊரடங்குக்கு முன்பு ₹330க்கு விற்ற ஒரு மூட்டை சிமெண்ட் ₹400 எனவும், ₹4200க்கு விற்ற ஒரு யூனிட் எம்.சாண்ட் ₹4600 எனவும், ₹17,500க்கு விற்ற ஒரு லோடு செங்கல் (3 ஆயிரம் எண்ணிக்கை) ₹18,500 எனவும், ₹50 ஆயிரத்திற்கு விற்ற ஒரு டன் கம்பி ₹52 ஆயிரம், ₹3,200க்கு விற்ற ஜல்லி ₹3,500 என விலை அதிகரித்துள்ளது. இதேபோல் மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதே சமயம், இந்த விலை உயர்வு தற்காலிகம் தான்.

ஊரடங்கு காரணமாக பல தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ெதாழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை, புதிய கட்டுமான பணிகள் அதிகளவில் தொடங்கும். நடப்பாண்டு கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் புதிய கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. புதிய கட்டுமான பணிகள் தொடங்க இன்னும் 3 மாதத்திற்கு மேலாகும். இவ்வாறு இன்ஜினியர்கள் கூறினர்.

தொழிலாளர் பற்றாக்குறை

தமிழகத்தில் தற்போது ஏற்கனவே தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. இதில் 40 சதவீதம் பேர் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஊரடங்கு காரணமாக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதால் பெரும்பாலான வட மாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், டைல்ஸ் ஒட்டுவது, பிளம்பர், எலக்ட்ரிக்கல் ஒர்க், கட்டிடம் கட்டுவது, பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் தமிழகத்திற்கு வருவதற்கு குறைந்தபட்சம் 2 மாதத்திற்கு மேலாகும். அதுவரை கட்டுமான பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையாக தான் இருக்கும் என்று இன்ஜினியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: