சற்று நிம்மதியடைந்த விவசாயிகள்; முதல்வர் உத்தரவிட்டதால் விவசாய பம்பு செட்டுகளில் மின் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தம்...அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னை: தமிழகத்தில் முதன்முதலாக கடந்த 1984ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் 1990ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதி, பெரு விவசாயிகளுக்கும் அதாவது அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சார திட்டத்தை அறிவித்தார். தற்போது தமிழகம் முழுவதும் 22 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. இதில் டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் இணைப்புகள் உள்ளன. இதற்கு தற்போது 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.  ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 24 மணி நேரமும் எந்தவித கட்டணமின்றி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இது சாகுபடிக்கு போதாது எனவும், மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தை குறைந்தபட்சம் 20 மணி நேரமாக உயர்த்த வேண்டும் எனவும் நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மின் பகிர்மானம், கட்டணம், மின் உற்பத்தி என நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இது, எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் விவசாயிகளுக்காக கொண்டு வந்த இந்த இலவச மின்சார திட்டத்திற்கு சமாதி கட்டும் திட்டம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே, விவசாய பயன்பாட்டிற்கு வழங்கும் புதிய மின் இணைப்புக்கு மின்மீட்டர் பொருத்தப்படுவதால் விவசாயிகள் அதிரிச்சி அடைந்துள்ளனர். மின் மீட்டர்கள் பொருத்தப்படுவதால் இலவச மின்சாரம் பறிபோகும் அபாயம் உள்ளதாக  விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என்றும் விவசாய பயன்பாட்டிற்கு எவ்வளவு மின்சாரம் செல்கிறது என அளவிட மட்டுமே மின்மீட்டர்கள் பொருத்தப்படுகிறது. இலவச விவசாய மின் இணைப்பு தரும் போது மீட்டர் பொருத்துவது 2 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது என்றும் தமிழக அரசு இன்று விளக்கம் அளித்தது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதால் விவசாய பம்பு செட்டுகளில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இலவச மின்சார திட்டம் தொடர வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம். தட்கல் திட்டத்தில் மட்டும் மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில் அதையும் வேண்டாம் என முதல்வர் கூறினார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவது ரத்து செய்யப்பட மாட்டாது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரந்து வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள எந்த விவசாயிகளும் இலவச மின்சாரம் குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

Related Stories: