பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து என்.டி.ஏ. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

 

சென்னை: தமிழ்நாட்டில் எங்கும் போதைப்பொருள் உற்பத்தி கிடையாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி; எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆர்ப்பாட்டத்தில் கூட கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. பாஜக தோழமை கட்சி என்பதால் கேஸ் சிலிண்டர் பிரச்சனையை குறித்து எடப்பாடி பேச மறுத்துவிட்டார். எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்பத் தயாராக இல்லை; அதிமுகவினருக்கே அவர் மீது நம்பிக்கை இல்லை.

எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; குஜராத்தில் உள்ள அதானிக்கு சொந்தமான துறைமுகம் வழியாகத்தான் போதைப்பொருள் நாட்டுக்கு வருகிறது. அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் இருந்தது; குட்காவுக்காக ஒரு அமைச்சர் மீதே வழக்கு போடப்பட்டது. போதைப்பொருள் சப்ளை செய்தவரையே தனது கட்சியில் வைத்திருக்கிறார் பழனிசாமி. நடிகர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து கைதானவர் அதிமுக நிர்வாகி. தமிழ்நாட்டில் இயன்ற அளவுக்கு போதைப்பொருளை தடுத்து இருக்கிறோம்.

பள்ளி அருகே எங்கு போதைப் பொருள் விற்கப்படுகிறது என்று பழனிசாமி சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியை விட, தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால், திட்டமிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற போலி நாடகத்தை உருவாக்க நினைக்கிறார்கள். பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து என்.டி.ஏ. ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. கூட்டணி சரியாக அமையாததால் ஏற்பட்ட விரக்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பிரச்சார பயணத்தில் தோல்வி அடைந்த ஒரே அரசியல் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்.

எப்பாடு பட்டாவது பொதுச்செயலாளர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்ற இலக்கோடுதான் பழனிசாமி செயல்படுகிறார். 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெல்வது உறுதி. ரஜினிகாந்தை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது என்பதை நாங்கள் ஏற்கனவே கூறிவிட்டோம். அன்புக்குதான் ரஜினிகாந்த் அடிபணிவார்; யாரும் அவரை மிரட்ட முடியாது. விஜய் கட்சி குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை, தமிழக வெற்றிக் கழகம் தோற்கும் என்பதையும், திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்பதையும் குறிப்பதாகவே நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்று கூறினார்.

Related Stories: