கோயில் நகை, விளக்கு, பாத்திரங்களை உயர்நீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே விற்பனை: திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் தகவல்

திருவனந்தபுரம்: கேரள  ேகாயில்களில் உள்ள நகைகள், விளக்குகள் மற்றும் செம்பு பாத்திரங்களை  உயர் நீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே விற்பனை செய்யப்படும் என  திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். கேரளாவில்  திருவிதாங்கூர் தேவசம்போர்டு, குருவாயூர் தேவசம்போர்டு, கொச்சி  தேவசம்போர்டு, மலபார் தேவசம்போர்டு என 4 தேவசம்போர்டுகள் உள்ளன.  திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட  1,248 கோயில்கள் உள்ளன.  இதில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்துதான்  பெரும்பாலான வருமானம் கிடைக்கிறது.

கொரோனா காரணமாக சபரிமலை உள்பட  அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் கோயில் வருமானம்  நின்றுவிட்டது. இதனால் தேவசம்போர்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. அரசும் தேவசம்போர்டுக்கு எந்த நிதி  உதவியும் செய்யவில்லை.நிலைமையை சமாளிப்பதற்காக  கோயில்களில் அதிகமாக உள்ள நகைகள், விளக்குகள் மற்றும் செம்பு பாத்திரங்களை  விற்பனை செய்து அதில் வரும் பணத்தை பயன்படுத்தி ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட  செலவுகளை சமாளிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு தீர்மானித்துள்ளது. இதற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் திருவிதாங்கூர்  தேவசம்போர்டு தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயில்களில்  வருமானத்தை அதிகரிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டிதான்  கோயில்களின் கிட்டங்கிகளில் தேங்கி கிடக்கும் பக்தர்கள் அன்பளிப்பாக  வழங்கிய நகைகள், விளக்குகள் மற்றும் செம்பு பாத்திரங்களை விற்பனை செய்ய  ஆலோசனை கூறியுள்ளது. இந்த பொருட்கள் குறித்த கணக்கெடுப்பு  நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தால் மட்டுமே,  தேங்கிக்கிடக்கும் பொருட்களை விற்பனை செய்வது குறித்து தீர்மானிக்கப்படும்  என தெரிவித்துள்ளார்.

Related Stories: