கேரள தமிழக எல்லையில் அமைந்துள்ள மூலத்தரை அணையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்: ஜூன் மாதம் திறக்க முடிவு

பாலக்காடு: கேரள- தமிழக எல்லை மீனாட்சிபுரம் அருகே மூலத்தரையில் அமைந்துள்ள அணையின் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதை, அடுத்த மாதம் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கேரள மற்றும் தமிழக எல்லையில் மீனாட்சிபுரத்தில் மூலத்தரை அணை உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மழை வெள்ளத்தால் அணையின் மதகுகள் உடைந்து சேதம் அடைந்தது. இதன் சீரமைப்பு பணிகள் ரூ.46.67 கோடி செலவில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது உடைந்த மதகுகள் சீரமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

அடுத்த ஜூன், ஜூலை மாதங்களில் கேரளாவில் பருவமழை பெய்யக்கூடும். இதனால் ஆழியாற்றிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் மூலத்தரை அணையின் மதகுகள் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டி கட்டுமான பணிகள் போர்க்கால் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதை, கேரள நீர்வளப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி தலைமையில் நீர்வளப்பாசனத்துறை உயரதிகாரிகள் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். முன்னதாக 13 மதகுகள் அணையில் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது 6 மதகுகள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 19 மதகுகள் உள்ள ரெகுலேட்டர் கம் பிரிட்ஜாக மாற்றப்பட்டுள்ளது.

இதனால் வாகன போக்குவரத்திற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சீரமைக்கப்பட்டுள்ள அணையை திறந்து வைக்கிறார்.

Related Stories: