பிரதமர் மோடி குறித்து டிவிட்டரில் அவதூறு காங்கிரஸ் தலைவர் சோனியா மீது வழக்கு பதிவு

பெங்களூரு: பிரதமர்  மோடிக்கு எதிராக களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடகாவில் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம்  ஷிவமொக்கா மாவட்டம், சாகர் தாலுகாவை சேர்ந்த பிரவீன் என்பவர் சாகர் போலீஸ்  நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா  தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு தீவிரமான முயற்சி மேற்கொண்டு வருகிறது.  உலக நாடுகளின் பொருளாதாரத்தை அசைத்து பார்க்கும் வகையில் அச்சுறுத்தி வரும்  கொரோனா தொற்று பரவலை தடுக்க நாட்டு மக்கள் அனைவரும் கைக்கோர்க்க வேண்டும்  என்ற நோக்கத்தில் பிரதமர் மக்களிடம் நன்கொடை வசூலித்து வருகிறார்.

அதற்காக  பிரதமர் நல நிதி என்ற பெயரில் கணக்கு தொடங்கியுள்ளார். பிரதமரின்  வேண்டுகோள் ஏற்று நாட்டு மக்கள் நிதி வழங்கி வருகிறார்கள்.  இந்நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில், கடந்த 11ம் தேதி பிரதமர்  கேர் பண்ட் வசூலிப்பது குறித்து தவறாக விமர்சனம் செய்துள்ளதுடன், மக்களிடம்  வசூலிக்கும் நிதியை தனது சொந்த தேவைகளுக்கு பிரதமர் பயன்படுத்தி  வருவதாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின்  இந்த தவறான பிரசாரம், பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்  உள்ளது. ஆகவே நல்ல நோக்கத்துடன் செயல்பட்டு வரும் பிரதமரை விமர்சனம்  செய்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது  வழக்கு பதிவு  செய்ய வேண்டும்  என்று கூறியுள்ளார். இதை ஏற்று சாகர் போலீசார்  சோனியா மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

Related Stories: