WHO-ல் இந்தியாவுக்கு பதவி! : உலக சுகாதார நிறுவன நிர்வாக குழு தலைவராக தேர்வாகிறார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்!!

டெல்லி : கொரோனாவுக்கு எதிராக உலகமே போராடி கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச சுகாதார அமைப்பில் இந்தியாவுக்கு முக்கிய பதவி கிடைத்துள்ளது. WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் ஒரு மனதாக தேர்வாகிறார்.கடந்த ஆண்டே தீர்மானிக்கப்பட்டபடி, உலக சுகாதார அமைப்பில் இந்தியா சார்பில் ஹர்ஷவர்தனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில் ஹர்ஷவர்தன் முறைப்படி தேர்வாகிறார்.

அடுத்த ஓராண்டுக்கு உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக ஹர்ஷவர்தன் பதவி வகிப்பார்.

ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் உலக சுகாதார அமைப்பு நிர்வாக குழு கூட்டத்திற்கும் அவர் தலைமை வகிப்பார்.இது முழு நேர பணியல்ல என்பதால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் ஹர்ஷவர்தன் தொடர்வார். கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த சர்ச்சையில் சீனாவுக்கு நெருக்கடி முற்றி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் முக்கிய பதவிக்கு இந்தியர் தேர்வாகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.   

Related Stories: