கொரோனா ஊரடங்கு எதிரொலி லட்சக்கணக்கான தென்னங்கன்றுகள் தேக்கம்: தொழிலாளர்கள் வேலை இழப்பு

போச்சம்பள்ளி: கொரோனா ஊரடங்கின் காரணமாக, லட்சக்கணக்கான தென்னங்கன்றுகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா தென்னங்கன்று உற்பத்தியில்  முக்கிய இடம் வகிக்கிறது. தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, பழனி, ஒட்டன்சத்திரம், நெல்லை, தென்காசி, பெரியகுளம் ஆகிய தென் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், போச்சம்பள்ளிக்கு வந்து, தென்னங்கன்றுகளை  வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்று அதிக விளைச்சலை கொடுப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், 4ம் கட்ட ஊரடங்கு வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போச்சம்பள்ளி தாலுகாவில், தென்னங்கன்றுகளை   வாங்கி செல்ல வெளி மாநில மற்றும் மாவட்ட வியாபாரிகள் வரவில்லை. இதனால், லட்சக்கணக்கான தென்னங்கன்றுகள் நர்சரி கார்டன் மற்றும் விவசாய நிலங்களில் தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், கூலியாட்கள் தற்போது வேலை இழந்துள்ளனர். எனவே, தேக்கமடைந்து உள்ள தென்னங்கன்றுகளை விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என போச்சம்பள்ளி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: