கொரோனா வைரஸ் எதிரொலியாக மூடப்பட்டது நன்னடத்தை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் மீண்டும் திறப்பு

வேலூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலூர், சென்னை, கோவை உள்ளிட்ட 5 சிறைகளில் பெட்ரோல் பங்க்குகள் 51 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது. 4ம் கட்ட ஊரடங்கு குறித்து அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது. இந்நிலையில் தமிழக சிறைத்துறையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து புழல், வேலூர், புதுக்கோட்டை, கோவை, பாளையங்கோட்டை என 5 சிறைகளின் கைதிகள் மூலம் பெட்ரோல் பங்க்குகள் இயங்கி வருகின்றனர். இந்த பெட்ரோல் பங்க்குகளில் நாள்தோறும் சுமார் ₹6 லட்சம் முதல் ₹8 லட்சம் வரை பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பை தவிர்க்க சிறைகளில் உள்ள கைதிகளை பார்க்க உறவினர்கள் சந்திக்க வரும் 30ம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டது. மேலும் பெட்ரோல் பங்க்குகளில் பணியாற்றும் கைதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, பெட்ரோல் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ₹90 லட்சம் வரை சிறைத்துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஊரடங்கு உத்தரவில் மத்திய, மாநில அரசுகள் பல தளர்வுகள் அறிவித்தன. மேலும் 34 வகையான கடைகள் கடந்த 11ம் தேதி முதல் திறக்கலாம், மேலும் பெட்ரோல் பங்க் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் 24 மணி நேரமும் திறக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, சிறைத்துறையின் கீழ் இயங்கும் வேலூர், புழல், புதுக்கோட்டை, கோவை, பாளையங்கோட்டை ஆகிய 5 பெட்ரோல் பங்க் இயங்க சிறைத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் சிறைத்துறையின் கீழ் இயங்கும் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. பங்க்கில் பணியாற்றும் நன்னடத்தை கைதிகள் போதுமான பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசம், சானிடைசர், கையுறை வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: