தவிக்கும் பாத்திர தொழிலாளர் குடும்பங்கள்: பட்டறைகளை திறக்காததால் வேலை இழப்பு

திருப்பூர்: திருப்பூரில் பட்டறைகளை திறக்காததால் பாத்திர தொழிலாளர் குடும்பங்கள் வேலை இழந்து தவிக்கின்றன. திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் சுமார் 500 பாத்திர பட்டறைகள் உள்ளது. இந்த பட்டறைகளில், செம்பு, பித்தளை, சில்வர் என பல்வேறு வகையான உலோகங்களை வைத்து அண்டா, குண்டா, சாமி சிலைகள், பிரபாவளி ஆகியவைகள் செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பாத்திரங்கள் பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பட்டறைகளில் திருப்பூர் மாவட்டம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக, பட்டறைகள் இயங்கவில்லை. இதனால், பாத்திர தொழில் அடியோடு பாதிக்கப்பட்டது. பாத்திர தொழிலாளர்களின் குடும்பங்கள் உணவின்றி தவித்து வருகின்றன. இது பற்றி பாத்திர தொழிலாளி பால்ராஜ் (46) கூறியதாவது:எனது சொந்த மாவட்டமான மதுரையில் இருந்து 15 வயதில் திருப்பூர் வந்தேன். பாத்திர தொழில் பழகி, தற்போது வெல்டராக பணியாற்றி வருகிறேன். கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்னரே பாத்திர கூலி உயர்வு வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது சுமார் ஒரு மாத காலம் வேலை இல்லை. வருமானம் இழந்து தவித்தோம். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு கூடவே வந்தது. இது, இத்தொழிலை அடியோடு முடக்கி போட்டுவிட்டது.

கடந்த 4 வாரத்திற்கு முன்பு பட்டறை முதலாளி ரூ.1,000 கடனாக கொடுத்தார். அதன்பின்னர், அவரிடம் சென்று முன்தொகையாக பணம் கேட்டேன். அவர், தொழில் இல்லாததால் பணம் தர மறுத்துவிட்டார். பாத்திர பட்டறையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இதே நிலைதான். தற்போது உணவிற்குகூட வழியில்லாமல் தவிக்கிறோம். ரேஷனில் அரிசி கிடைப்பதால், உண்டு வாழ்க்கை நடத்துகிறோம். சில நேரங்களில் அதுவும் கிடைப்பதில்லை. தொழில் இல்லாததால் மிகவும் கொடுமையான சூழலை அனுபவித்து வருகிறோம். இவ்வாறு பால்ராஜ் கூறினார்.பாத்திர தொழிலாளர் சங்கங்களின் கூட்டுக்குழு செயலாளர் ரங்கராஜ் கூறியதாவது: பாத்திர பட்டறைகள் ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை. இதனால், தொழிலாளர்கள் வருவாய் இழந்து தவிக்கிறார்கள். எனவே, அரசு சார்பில் பாத்திர தொழிலாளர்களுக்கு வாரம் தலா ரூ.1,000 நிவாரணம் வழங்கவேண்டும். பாத்திர தொழிலுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்க வேண்டும். இத்தொழிலாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து, இவர்களது வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ரங்கராஜ் கூறினார்.

Related Stories: