எல்லையில் மீண்டும் பதற்றம்: லடாக் அருகே பறந்த சீன ஹெலிகாப்டர்கள்: இந்திய போர் விமானங்கள் விரட்டின?

புதுடெல்லி: இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே வரையறுக்கப்படாத எல்லையில் சீன ஹெலிகாப்டர்கள் சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவற்றை இந்தியாவின் சுகோய் 30 போர் விமானங்கள் விரட்டியடித்தாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவும், சீனாவும் 3488 கி.மீ. தூர எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இவற்றில் பல பகுதிகள் வரையறுக்கப்படாமல் உள்ளன. இதன் காரணமாக, அவ்வப்போது இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நடக்கும். கடந்த 2017ம் ஆண்டு சிக்கிம் மாநில எல்லையில் உள்ள டோக்லாமில் இருநாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்னை 73 நாட்கள் நீடித்தது. பின்னர், தூதரக நடவடிக்கைகள் மூலம் இப்பிரச்னை தீர்க்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி வடக்கு பாங்காங் பகுதியில் இருநாட்டை சேர்ந்த தலா 250 வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமடைந்தனர். உள்ளூர் ராணுவ அதிகாரிகளின் சமரசத்தை தொடர்ந்து அமைதி ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சனியன்றும் வடக்கு நகுலா கணவாய் பகுதியில் இருதரப்பை சேர்ந்த தலா 150 வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் இருதரப்பை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், காஷ்மீரில் கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வரையறுக்கப்படாத எல்லைப் பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டன.

இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில் இந்திய விமானப்படையின் சுகோய் 30 ரக போர் விமானங்கள் அவற்றை விரட்டியடித்ததாக கூறப்படுகின்றது. இதனால், எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. ஆனால், சீன ஹெலிகாப்டர்களை இந்திய போர் விமானங்கள் விரட்டியது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. வழக்கமாக எல்லைப் பகுதியில் சீனாவின் எல்லை பக்கத்தில் அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபடும். அதே நேரத்தில் இந்திய விமானங்களும் இங்கும் பறக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: