தங்களை பற்றி கூட அல்லாமல் அன்புக்குரியவர்கள் பற்றியே அதிகம் கவலைப்படும் மக்கள்: கொரோனா மனநிலைஆய்வு தகவல்

பனாஜி: கோவாவில் உள்ள மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் பத்மநாபன் விஜயராகவன், திவ்யா சிங்கால் ஆகியோர் கொரோனா காலக கட்டத்தில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா காலக் கட்டத்தில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட 145 ஆண்கள், 86 பெண்கள் என மொத்தம் 231 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 47.62 சதவீத‍த்தினர் தனியார் நிறுவனங்கள் அல்லது அரசு துறைகளில் பணியாற்றுகின்றனர்.  இதில் 82.25 சதவீத‍த்தினர், தங்களைப் பற்றி கூட கவலைப்படாமல், அன்புக்குரியவர்கள் எப்படி இருக்கின்றனரோ என்று அவர்களை பற்றியே அதிக கவலை கொண்டனர்.

உடலில் ஏற்படும் சளி, இருமல், தும்மல் போன்ற சிறிய உபாதைகளுக்கும் கூட உடனடியாக மருத்துவரை அணுகி கொரோனா அறிகுறியாக இருக்குமோ என்று பரிசோதிக்கின்றனர். படம் பார்ப்பது, உறவினர்களுடன் சாட் செய்வது என்று ஐம்பது சதவீத‍த்துக்கும் மேற்பட்டோர் சமூக வலைதளங்களில் அதிகளவு நேரத்தை செலவிடுவதாகவும், தங்களது இந்த தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் உலா வரும் கொரோனா பற்றிய செய்திகளையே படித்து கொண்டிருப்பது போரடித்து விட்டதாகவும் இதனால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

அதே நேரம், உண்மையற்ற செய்திகளாக இருப்பின் அவற்றை பற்றி கவலைப்படுவதில்லை என்றும் கூறியுள்ளனர். பொதுமுடக்கத்தின் போது 41 சதவீத மக்கள் யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும், 19 சதவீத‍த்தினர் எவ்வித உடற்பயிற்சியிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இது தவிர, 57 சதவீத‍த்தினர் தியானத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: