டாஸ்மாக் கடைகளை மூடும் ஐகோர்ட் உத்தரவிற்கு எதிரான தமிழக அரசின் மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு எடுக்க இயலாது: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: டாஸ்மாக் மதுக்கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்த தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மே 17வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை தவிர தமிழகம் முழுவதும் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு கடந்த 4ம் தேதி ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் “டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மது வாங்க வருபவர்கள் ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டையை காட்ட வேண்டும். அவர்களுக்கு மது வாங்கியதற்கான பில் வழங்கப்பட வேண்டும். ஒரு முறை மது வாங்கியவர்கள் 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகே மீண்டும் மது வாங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து, மே 7ம் தேதி சென்னை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் மது விற்பனை தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  பல்வேறு இடங்களில் மதுக்கடைகளை மூடுமாறு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் கடைகளில் கட்டுக்கடங்காத வகையில் மது வாங்க வருபவர்களின்  கூட்டம் உள்ளது. எந்த கடையிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. இதனால், கொரோனா வைரஸ் அதிகமாக பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி போன்ற இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, தமிழகத்திலும் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யுமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வக்கீல் ஜி.ராஜேஷ், மக்கள் நீதி மய்யத்தின் மூத்த நிர்வாகி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மவுரியா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில், டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வந்தவர்களின் கூட்ட நெரிசல், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாதது, அடையாள அட்டை இல்லாமலும், பில் தராமலும் மது பாட்டில்கள் விற்பனை செய்தது ஆகியவை குறித்த புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், பத்திரிகை செய்திகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளும் கடைபிடிக்கப்படவில்லை. எனவே, ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அரசு விரும்பினால் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யலாம்.

அதன் மூலம் வீடுகளுக்கு மது பாட்டில்களை டெலிவரி செய்யலாம்” என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு சார்பில் வக்கீல் யோகேஷ் கண்ணா மனு தாக்கல் செய்தார். அதில், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒருசில இடங்களில் நடந்துள்ள சம்பவங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  எனவே, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தங்களை கேட்காமல் விசாரணை நடத்தவோ,

உத்தரவிடவோ கூடாது எனக்கோரி மக்கள் அதிகாரம் சார்பில் மகாலட்சுமி, மகளிர் ஆயம் சார்பில் லட்சுமி மணியரசன், வக்கீல்கள் ஜி.ராஜேஷ், கே.பாலு உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவில்லை. மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு எடுக்க இயலாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பிழையை சரி செய்து மீண்டும் மனுத்தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: