விஷ வாயு கசிவால் 12 பேர் பலி: தொழிற்சாலையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்: விசாகப்பட்டினத்தில் பரபரப்பு

திருமலை: விசாகப்பட்டினம் விஷவாயு கசிவால் 12 பேர் பலியான நிலையில் தொழிற்சாலையை மூடக்கோரி  பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் விசாகப்பட்டினத்தை அடுத்த ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த எல்.ஜி பாலிமர் தொழிற்சாலையில் உள்ள ராட்சத பாய்லரில் இருந்து கடந்த 7ம் தேதி விஷவாயு கசிவு ஏற்பட்டு 12 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும் 516 பேர் தனியார் மற்றும் அரசு    மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷ வாயுவால் அந்த நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சர் அவந்தி சீனிவாஸ், டிஜிபி கவுதம் சவாங், தொழிற்சாலைகள் துறை செயலாளர் கரிகால வளவன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர்  விஷவாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை பார்வையிடுவதற்காக நேற்று தொழிற்சாலைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.  இதனை அறிந்த பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘எங்கள் உறவினர்கள், நண்பர்கள் பலர் உயிரிழக்கக்  காரணமாகவும், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தங்களுக்கு வருங்காலத்தில் எந்த மாதிரியான உடல் உபாதைகள் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எங்களுக்கு இந்த நிலையை உண்டாக்கிய தொழிற்சாலையை உடனடியாக இந்த பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது பெயரளவில் வழக்குப்பதிவு செய்து காப்பாற்றும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி அவர்களை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது’’ என்றனர். தொடர்ந்து உயிரிழந்த 12 பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரவர் வீடுகளுக்கு கொண்டு செல்வதற்காக தொழிற்சாலை வழியாக ஆம்புலன்ஸ் வந்தபோது, 3 பேரின் சடலங்களை தொழிற்சாலை வாசலில் வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் போராட்டக்காரர்கள் பலர் தொழிற்சாலைக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் பலர் உள்ளே செல்ல முயன்றனர். இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதற்கிடையே தொழிற்சாலையில் ஆய்வு செய்துவிட்டு வெளியே வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் அவந்திசீனிவாஸ் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் சடலங்களை அங்கிருந்து ஆம்புலன்சில் ஏற்றி அவரவர் வீடுகளுக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.

வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய முடிவு

சுற்றுலா துறை அமைச்சர் அவந்தி சீனிவாஸ் நிருபர்களிடம் கூறுகையில், `தொழிற்சாலையை காட்டிலும் பொதுமக்களின் நலனே எங்களுக்கு முக்கியம். தற்போது அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசு அமைத்த அதிகாரிகள் கமிட்டியின் அறிக்கைக்கு பின் முடிவு எடுக்கப்படும். பொதுமக்களின் அனுமதி இல்லாமல் தொழிற்சாலை செயல்படாது. இந்த தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தேவையான மருத்துவ முகாம்கள் அமைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு தரமான உணவு வழங்கி, மருத்துவ கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. அதிகாரிகள் தெரிவித்த பின் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்’’’’ என்றார்.

‘அரசின் முடிவுக்கு தயாராக உள்ளோம்’

எல்ஜி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தற்போது நடைபெற்ற விபத்து துரதிர்ஷ்டவசமானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதத்திலும் உதவியாகவும் துணையாகவும் இருக்க நிறுவனம் தயாராக உள்ளது. குறுகிய, நீண்டகால மருத்துவ சேவை தேவைப்பட்டால் அதற்கும் கட்டுப்பட்டு உள்ளோம். அரசின் முடிவுக்கு தயாராக உள்ளோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: