இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு மகாராஷ்டிரா கல்லூரிகளில் எல்லோரும் ஆல் பாஸ்...உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் உதய் சாமந்த் நேற்று அறிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் 9 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அந்த வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்கலைக்கழகத் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 13 அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளின் முதலாவது மற்றும் இரண்டாவது ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் உதய் சாமந்த் நேற்று அறிவித்தார். முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முதலாவது மற்றும் இரண்டாவது ஆண்டு மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவார்கள். இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியதில்லை.

எஞ்சிய 8 லட்சம் மாணவர்கள், அதாவது மூன்றாவது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூலை 1ம் முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ஒருவேளை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் பட்சத்தில் ஜூன் 20ம் தேதிக்குப் பிறகு நிலைமையை ஆய்வு செய்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

50-50 சதவீத பார்முலா

முதலாவது மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 50-50 சதவீத பார்முலாப்படி அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் உதய் சாமந்த் கூறினார். ‘‘முந்தைய ஆண்டில் மாணவர் பெற்ற மதிப்பெண்களில்  50 சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டும். நடப்பு கல்வியாண்டில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டும் மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். சில தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றாலும் அரியர் தேர்வுகளை அடுத்த 120 நாளில் முடிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: