பறிமுதல் வாகனங்களை பெற்று தருவதாக பண மோசடி போலி வழக்கறிஞர் பிடிபட்டார்

புழல்: புழல் அருகே  போலி வக்கீல் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய புழல் அறிஞர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த இன்பநாதன் மற்றும் புழல் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 6 பேரின் பைக்குகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு புழல் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதுபற்றி அறிந்த ஒருவர், மேற்கண்ட 6 பேரிடம், தன்னை வக்கீல் என அறிமுகம் செய்துகொண்டு, ‘‘புழல் போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார்  எனக்கு மிகவும் தெரிந்தவர். நான் வந்து உங்களின் பைக்குகளை பெற்று தருகிறேன்,’’ என கூறியுள்ளார். மேலும் இதற்காக, இன்பநாதனிடம் 1,200 ரூபாயும், மற்றவர்களிடம் 600 ரூபாயும் பெற்றுள்ளார். பின்னர், மேற்கண்ட 6 பேரையும் அழைத்துக்கொண்டு நேற்று புழல் காவல் நிலையம் சென்றார். அங்கு 6 பேரையும் வெளியில் நிற்க வைத்துவிட்டு, காவல் நிலையம் உள்ளே சென்ற அந்த வக்கீல், சிறிது நேரம் கழித்து வெளியில் வந்தார்.

அப்போது, அந்த 6 பேரிடம், ‘‘போலீசிடம் எல்லாம் பேசிவிட்டேன். இன்ஸ்பெக்டர் வெளியில் சென்றுள்ளார். அவர் வந்தவுடன் உங்களது பைக்குகளை கொடுத்துவிடுவார்கள். வாங்கி கொள்ளுங்கள். நான் புறப்படுகிறேன்,’’ என்றார்.  

இதை ஏற்காத அவர்கள், அந்த வக்கீலிடம் வாக்குவாதம் செய்தனர். சத்தம் கேட்டு வெளியில் வந்த சட்டம் ஒழுங்கு போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, நடந்ததை கூறினர். இதையடுத்து, போலீசார் அந்த வக்கீலிடம் விசாரித்தபோது, அவர் மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசக்தி வடிவேல் (50) என்பதும், இவர் போலி வக்கீல் என்பதும் தெரிந்தது. மேலும், இவர் பலரிடம் இதுபோல் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: