புகார்கள் குறைந்துள்ளன; பொதுமான நீர் இருப்பில் உள்ளதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது; மெட்ரோ குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: ஊரடங்கின் போது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மெட்ரோ குடிநீர் வாரியத்தின் செயல்பாடு முக்கியமானதாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் பரவி கொண்டிருந்தாலும், கொடையின் தாக்கம் சென்னை தொடங்கி விட்டது. இந்த காலத்தில் மக்களுக்கு குடிநீர் தட்டுபாடு வந்து விடக்கூடாது என்று முழு வீச்சில் மெட்ரோ குடிநீர் வாரியம் செயல்பட்டு வருகிறது. வீடுகளில் பாதுகாப்பாக மக்களுக்கு குடிநீர் சென்றடைவதற்காக மெட்ரோ குடிநீர் வாரிய ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அதிகம் இடங்களுக்கு செல்லும் அவர்களுக்கு குடிநீர் வாரியத்தின் சார்பில் பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள், கையுறைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் அனைத்து பகுதிக்கும் மாநகராட்சி மூலம் சுமார் 650 லாரிகள் மூலம் குடிநீர் தினமும் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது, வணிக வளாகங்கள், கல்லி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், அவற்றிற்கு வழங்கப்பட்டு வந்த  குடிநீர்களும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் மக்களுக்கு தேவையான நீர் கிடைப்பதால், மெட்ரோ குடிநீர் வாரியத்திற்கு வரும் புகார்கள் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஒருநாள் குடிநீர் தேவை 650 மில்லியன் லிட்டராக உள்ள நிலையில், கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் மூலம் 180 மில்லியன் லிட்டரும், வீரானம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டரும் கிடைக்கின்றன. இதனைபோல்  சோழவரம், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து ஒரு நாளைக்கு 250 மில்லியன் லிட்டரும் ஆழ்துளை கிணறுகள் மூலம் 40 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏரிகளிலும் பொதுமான  நீர் இருப்பில் இருப்பதாகவும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நதி நீர் கிடைத்துள்ளதால், சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: